வியாழன், 2 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

பற்கள் பராமரிப்பு பற்றி ஆயுர்வேதத்தில் கூறப்படுபவை

பற்கள் பராமரிப்பு பற்றி ஆயுர்வேதத்தில் கூறப்படுபவை

பற்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நம்மால் பல பல் வியாதிகளை தடுக்க முடியும்.


 


 பற்கள் இயற்கையாகவே சிலருக்கு அழகாய், வெண்மையாய், வரிசையாய், உறுதியாய், கடினமான பொருட்களையும் உடைத்து கூழாக்கும் சக்தியுடன் அமைகின்றன. 
 
பற்களை திடமாக வைப்பதில் நல்லெண்ணெய்க்கு நிகராக எதுவுமில்லை. தினமும் காலையில் பல்துலக்கியதும் அரைவாய் நிறையும் அளவு நல்லெண்ணெயை வாயில் விட்டுக் கொண்டு 10 -15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு துப்ப வேண்டும். இதை தைல கண்டூஷம் என்று ஆயுர்வேதம் வர்ணிக்கின்றது. தொடர்ந்து இதை உபயோகிப்பதன் மூலம் பற்கள் தேய்வை அடையாமலும், ஈறுகளும் வேர்களும் உறுதியும் பெறுகின்றன. வலி வராமலும், புளிப்புச் சுவையினால் ஏற்படும் கூச்சமும் உண்டாகாது. கடினமான உணவுகளையும் எளிதில் உடைத்து சுவைத்துச் சாப்பிட நல்லெண்ணெய் கண்டூஷம் உதவுகிறது.
 
பல் துலக்கும் முறையும், எப்போதெல்லாம் பல் துலக்க வேண்டும் என்ற விஷயத்தையும் சிரத்தையுடன் அனுஷ்டிப்பதன் மூலம் ஊத்தை அழுக்கு ஆகியவற்றை முழுமையாக அகற்ற முடியும். அவ்வாறு சுத்தமாக வைத்திருந்தால்தான் உணவின் சாரத்தை பற்கள் முழு அளவில் பெற்று பயனடையும். 

காலையில் கண்விழித்ததும் மலஜலங்களை போக்கி வாயை நன்கு தண்ணீரினால் கொப்பளித்து பிறகு பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவு உண்டதும் பல் துலக்க வேண்டும். ஆனால் இன்று அது நடைமுறை சாத்யம் அல்லாததால் இரவில் படுக்கும்முன் பல் துலக்குவது நல்ல பழக்கமாகும்.
 
நம் முன்னோர்கள் ஈரமுள்ள ஆல், அத்தி, எருக்கு, கருவேல், இலந்தை மற்றும் வேப்பங்குச்சி போன்ற மரக்குச்சிகளை உபயோகித்து பற்களை பாதுகாத்தனர். இவ்வகை குச்சிகள் துவர்ப்பு, கசப்பு, காரம் போன்ற சுவை நிரம்பியவை, வாய் மற்றும் பற்களில் அழுக்கு சேராதபடி பாதுகாப்பதில் இச்சுவைகள் பெரிதும் உதவுகின்றன. 
 
பல் துலக்கும் முறையில் அதிக அழுத்தம் கொடுத்து பற்களை தேய்க்கக்கூடாது. ஈறுகளில் பிரஷ் படாதவாறு நிதானமாகத் தேய்க்க வேண்டும். மேல் வாய்ப் பற்களை தேய்க்கும்போது மேலிருந்து கீழாகவும், கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். பல் தேய்த்ததும் வாயில் நிறைய தண்ணீர் விட்டு கொப்பளிக்க வேண்டும். ஆயுர்வேத மருந்துகளில் பல் பாதுகாப்பிற்கு அரிமேதஸ் தைலம், 10 சொட்டு வெந்நீருடன் காலை, இரவு பல் தேய்த்த பிறகு கொப்பளிக்க பயன்படுத்துதல் நலம் தரும்.