செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

வறண்டு போன தலைமுடிக்கு இயற்கை வழியில் சில தீர்வுகள்

கறிவேப்பிலையையும் பெரிய நெல்லிக்காயையும் நன்கு அரைத்து வடை மாதிரி தட்டிக் கொள்ளுங்கள். இந்த வடைகளைச்  சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் இரண்டு வாரம் வையுங்கள். பச்சை நிறத்தில் கிடைக்கிற அந்தத்  தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால், அழகு கூந்தல் கிடைக்கும்.



சோற்றுக் கற்றாழையை வெட்டி, வெந்தயத்தை அதன் வெள்ளைப் பகுதியில் தூவி, மூடி வையுங்கள். இரண்டு அல்லது மூன்று  நாட்கள் கழித்துப் பார்த்தால் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை எடுத்து, நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் முடி கருகருவென்று வளரும். இது  உடலுக்குக் குளிர்ச்சியும்கூட. சைனஸ், தலைவலி இருப்பவர்கள் மட்டும் இதைத் தேய்க்கக்கூடாது.
 
பீட்ரூட் 1, மருதாணி 1 கப், கத்தா (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)  2 கப், வெந்தயப் பவுடர் 2 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் பீட்ரூட்டை மசிய அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில், பீட்ரூட்,  கத்தா, வெந்தயப் பவுடர் போட்டு மூடி வைத்து இறக்குங்கள். இதன் சாறு தண்ணீரில் இறங்கி விடும். வெதுவெதுப்பு நிலையை  அடைந்ததும் இந்தத் தண்ணீரை வடிகட்டி, மருதாணிப் பவுடர் கலந்து ஒரு இரவு வையுங்கள்.
 
மறுநாள் இந்தக் கலவையை கூந்தல் முழுக்கவும் பூசி, ஒரு மணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். தொடர்ந்து இப்படி  நாலைந்து தடவை செய்தாலே கூந்தலின் நிறத்தில் நல்ல வித்தியாசம் தெரியும்.
 
தேங்காயை நன்றாக அரைத்து, பால் எடுத்து, கூந்தலில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். இதைத்  தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.
 
பொடுகை போக்க வசம்பைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைப்பகுதியில் படும்படி தேய்த்து, ஒரு  மணி நேரம் ஊறவைத்து அலசி வந்தால் பொடுகு தொல்லை குறையும். தேங்காய் எண்ணெயுடன் வேப்பம்பூவைக் காய்ச்சி இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வருவதும் நல்ல பலன் தரும்.
 
வேப்பிலை, வசம்பு, வால் மிளகு மூன்றையும் நன்கு அரைத்து, மயிர்க்கால் களிலும் தலையிலும் படும்படி, தடவி அரைமணி  நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். நல்ல பலன் தரும்.