1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (23:54 IST)

சூட்டைத் தணிக்க உதவும் நன்னாரி

Nannari Root
கோடைக் காலத்தில் அதிகம் பயன்படும் மூலிகை நன்னாரி. சிறு கசப்பும், இனிப்பும் சேர்ந்த சுவையைக் கொண்ட நன்னாரி வேருக்கு மிகுந்த குளிர்ச்சித்தன்மை உண்டு. 
 
நீர்க்கடுப்பு குணமாக ஒரு கைப்பிடி அளவு பசுமையான நன்னாரி வேரினை நீரில் அலசி சுத்தம் செய்யவும். அதனைத் தேவைக்கு ஏற்ப குடிநீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து கஷாயமாகக் காய்ச்சிக் கொள்ளவும். அரை டம்ளர் அளவு கஷாயத்தில் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
 
மூலச்சூடு, வெட்டைச்சூடு குணமாக தண்ணீரில் சுத்தம் செய்த பசுமையான நன்னாரி வேரை சிறிது அளவு எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் இதனை ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலுடன் கலக்கி, தினமும் இரண்டு வேளை குடிக்க வேண்டும். இதனால் மூலச்சூடு, வெட்டைச்சூடு உள்ளிட்ட பிரச்னைகள் குணமாகும். தொடர்ந்து இவ்வாறு குடித்து வந்தால், இளநரை, பித்த நரை மாறுவதோடு வறட்டு இருமலும் குணமாகும்.
பித்தநோய் குணமாக சுத்தம் செய்த பசுமையான நன்னாரி வேரை இரு கைப்பிடி அளவு இடித்து எடுத்துக்கொள்ளவும். இதனை கால் லிட்டர் குடிநீரில் இட்டு ஒரு நாள் முழுதும் ஊறவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வடிகட்டிய நீரை தினமும் காலை மாலை என இரு வேளை குடித்து வர, அதிக பசி, தாகம், பித்த நோய், நீரிழிவு ஆகியவை கட்டுப்படுத்தப்படும். பத்தியம் அவசியம் என்பதால், மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும்.
 
சிறுநீர்க்கட்டு சிக்கல் தீர நன்னாரி வேரை நீரில் அலசிச் சுத்தம்செய்து வெயிலில் நன்றாகக் காயவைத்த பின்னர் இடித்துத் தூளாக்கிக்கொள்ள வேண்டும். இந்த வேர்ச் சூரணத்தை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்துக் கலக்கி குடித்துவந்தால், சிறுநீர்க் கழிக்க முடியாமல் அவஸ்தைப்படும் சிறுநீர்க்கட்டு நன்கு குணமாகும்.
 
உடல் உஷ்ணம் தணிய சுத்தம் செய்த பசுமையான நன்னாரி வேர் அல்லது உலர்ந்த நன்னாரி வேரை மண் பானை நீரில் போட்டுவைத்து குடிநீராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சி பெறும்.