வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 10 ஜூலை 2024 (07:44 IST)

‘என்னுடைய தொழில் மனைவி நீங்கள்’… ராகுல் டிராவிட் குறித்து பதிவிட்ட ரோஹித் ஷர்மா!

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். இந்நிலையில் வீரர்கள் அறையில் விடைபெறும் போது நெகிழ்ச்சியாக பேசிய அவர் “நான் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் விடைபெற வேண்டும் என நினைத்தேன். ஆனால் ரோஹித் ஷர்மாதான் எனக்கு அழைத்துப் பேசி எனது பதவிக் காலத்தை நீட்டிக்க சொன்னார். அவரின் அந்த அழைப்பால்தான் என் முடிவை மாற்றிக் கொண்டேன்.” என அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பயிற்சியாளர் டிராவிட்டுடனான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் கடந்த சில நாட்களாக இதைப் பற்றி எழுத வார்த்தைகள் இன்றி தவித்தேன். கோடிக்கணக்கானவர்கள் எப்படி உங்களை ஒரு கிரிக்கெட்டராக ரசித்தார்களோ, அப்படியே நானும் உங்களை ரசித்தேன். ஆனால் உங்களோடு இணைந்து பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

நீங்கள் உங்கள் சாதனைகளை எல்லாம் வெளியே வைத்துவிட்டு ஒரு பயிற்சியாளராக எங்களுக்கு வந்தீர்கள். உங்களிடம் எதைப் பற்றியும் உரையாடக் கூடிய ஒரு சுதந்திரத்தைக் கொடுத்தீர்கள். உங்களிடம் இருந்து நான், நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். உங்களுடனான நினைவுகள் எப்போதும் என் மனதில் இருக்கும்.

என்னுடைய தொழில் மனைவி நீங்கள்தான் என்று என் மனைவி சொல்வார். அப்படி அழைக்கப்பட்டதற்காக நான் பெருமைப்படுகிறேன். உங்களை என் பயிற்சியாளர், என் நண்பர் என சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன் ராகுல் பாய்” எனக் கூறியுள்ளார்.