1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (12:58 IST)

40 வயதில் ஓய்வு –இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளங்கி வரும் ரங்கனா ஹெராத் இங்கிலாந்து அணியுடன் நடக்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

1978 ஆம் ஆண்டு பிறந்த ஹெராத் தனது 21 வயதில்  1999-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காலே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். ஆனாலும் தனக்கென இலங்கை கிரிக்கெட் அணியில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க அவருக்கு 11 ஆண்டுகள் ஆனது.

முத்தையா முரளிதரன் என்ற ஆலமரத்தின் கீழ் வளரமுடியாத ஒரு சிறு செடியாய் 11 ஆண்டுகளாகவும் விடாமல் போராடிக்கொண்டு இருந்தார். 2010 ஆம் ஆண்டு முரளிதரனின் ஓய்வுக்குப் பிறகே ஹெராத்துக்கான இடம் அணியில் உறுதியானது.

ஹெராத்தின் கிரிக்கெட் வாழ்க்கையை 1999-2010 மற்றும் 2010-2018 என இரண்டு பாகங்களாக பிரிக்கலாம். முதல் 11 ஆண்டுகளில் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சராசரியாக 38 ரன்களுக்கு ஒரு விக்கெட் என 71 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரது மறுவருகையான 2010 ஆண்டில் இருந்து தற்போது வரை 70 போட்டிகளில் விளையாடி 25 ரன்களுக்கு ஒரு விக்கெட் என 359 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

முரளிதரன், ஜெயசூர்யா, சங்ககரா மற்றும் ஜெயவர்த்தனே என அனுபவ வீரர்களின் ஓய்வுகளுக்குப் பிறகு இலங்கை அணியின் மேட்ச் வின்னராக செயல்பட்டு ஆறுதல் அளித்தவர் ஹெராத் மட்டுமே. இந்த 8 ஆண்டுகளில் இலங்கை அணி வெற்றிபெற்ற சொற்ப டெஸ்ட் போட்டிகளிலும் ஹெராத்தின் பங்கே அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவர் அணி போல விளையாடி வரும் இலங்கைக்கு ஹெராத்தின் ஓய்வு மேலும் மோசமான நிலைமையே உண்டாக்கும்.

இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் 430 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ஹெராத் அதிக விக்கெட் விழ்த்தியவர்கள் 10 வது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மேலும் 5 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில்  நியுசிலாந்தின் ஹாட்லி, இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராட் மற்றும் இந்தியாவின் கபில்தேவ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 7 வது இடத்திற்கு முன்னேறி விடுவார்.

ஹெராத் ஏற்கனவே ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.