1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (09:22 IST)

இங்கிலாந்து-இலங்கை முதல் ஒருநாள் போட்டி –வென்றது மழை

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டுள்ளது.

தம்புலாவில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய அணி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அணியின் ரன் 49 ஆக இருந்த போது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ 25 ரன்களில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் 24 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் கேப்டன் மோர்கன் இணை ஓவருக்கு ஆறு ரன்கள் வீதம் என சிறப்பாக விளையாடி வந்தனர். 15 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 92 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழைப் பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நீண்ட நேரமாகியும் மழை விடாத காரணத்தால் நடுவர்கள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி அக்டோபர் 13-ந்தேதி இதே ஆடுகளத்தில் நடைபெற இருக்கிறது.