வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 27 மே 2024 (11:29 IST)

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடம் சூட்டிய கொல்கத்தா.!! ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி அசத்தல்..!!

KKR Champion
சென்னை சேப்பாக்கத்தில்  நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது.
 
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தகுதி பெற்றன. இந்நிலையில் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
 
டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா வெறும் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர், ராகுல் திரிபாதி களம் காண, டிராவிஸ் ஹெட் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தார். 
 
திரிபாதி 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணி 6 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 7வது ஓவரில் நித்திஷ் ரெட்டி அவுட் ஆக கிளாசன் களம் கண்டார். 10 ஓவர் முடிவிற்கு 61 - 4 என்ற கணக்கில் ஹைதராபாத் அணி விளையாடியது. மார்க்ராம் 11வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 5 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி திணறியது.
 
KKR
வருண் சக்கரவர்த்தி பந்தில் ஷாபாஸ் அகமது விளாச நரைன் கேட்ச் பிடித்ததால், ஷாபாஸ் அகமது தனது விக்கெட்டை இழந்தார். அப்துல் சமத் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிச் சென்றார்.  ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ்  நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களைக் குவித்தார். இருந்தாலும், பாட்னர்ஷிப்பில் இருந்த கிளாசன் ரானா, வீசிய பந்தில் போல்ட் ஆனார்.  18வது ஜெய்தேவ் உனத்கட் எல்பிடபிள்யூ ஆனார்.

18.3வது ஓவரில் ஹைதராபாத் அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் 24 ரன்களும், மார்க்ராம் 20 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் ரசல் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ராணா தலா 2 விக்கெட்டுகளை  வீழ்த்தி அசத்தினர்.
 
114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ், நரைன் ஆகிய இருவரும் களமிறங்கினர். நரைன் 6 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். இதையடுத்து ஜோடி சேர்ந்த குர்பாஸ், வெங்கடேச ஐயர் ஆகிய இருவரும் ரன் மழையில் ஈடுபட்டனர். குர்பாஸ் 39 ரண்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் வெங்கடேச ஐயர் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்தார்.

Sharakun
தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கிய நிலையில் 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை மகுடம் சூட்டியது.  வெங்கடேச ஐயர் 52 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது. முன்னதாக 2012 மற்றும் 2014ல் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.