அஸ்வின் இந்திய அணிக்கே கேப்டனாகி இருக்கவேண்டியவர்… கவாஸ்கர் புகழாரம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்து ஜாம்பவான் அஸ்வின் தனது 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.
உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 8 ஆவது பவுலராகவும், இந்திய அளவில் இரண்டாவது பவுலராகவும் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் அஸ்வினைப் பாராட்டி சுனில் கவாஸ்கர் ஆங்கில ஊடகம் ஒன்றில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் “அவருக்கு எனது வாழ்த்துகள். அவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் குறித்து சிந்திப்பவர்களில் ஒருவர். எப்போதும் புதிய மற்றும் வித்தியாசமான முயற்சிகளை எடுக்க அவர் தயாராக இருக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்திய அணி இரண்டு அணிகளாக விளையாடிய போது அவர் இந்திய அணிக்கே கேப்டனாகி இருக்க வேண்டும். ஆனாலும் அவர் இப்போதும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மேலும் பல விக்கெட்களை வீழ்த்தவும் பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.