1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:14 IST)

ஒநாய் சந்திர கிரகணம் 2020: நீங்கள் கிரகணத்தை எங்கு, எப்படி காணலாம்?

அரிய சூரிய கிரகணத்தோடு விடை பெற்றது 2019ஆம் ஆண்டு. இச்சூழலில், இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நிகழ உள்ளது.
இந்த நிகழ்வு உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இது இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் என்பதே ஆகும்.
 
இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகில் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் இதைப் பார்க்க முடியும். ஆனால், அமெரிக்காவில் இதைப் பார்க்க முடியாது.
 
இந்த ஆண்டு மட்டும் இதுபோன்று நான்கு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன.
 
சந்திர கிரகணம் என்றால் என்ன?
மிக எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும்போது அந்நிகழ்வே சூரிய கிரகணமாகும். நிலவுக்கும், சூரியனுக்கும் நடுவே பூமி இருக்கும்போது அது சந்திர கிரகணமாகும்.
 
இன்று நிகழப்போகும் சந்திர கிரகணத்தின் சிறப்பு என்ன?
 
பொதுவாக சந்திர கிரகணத்தின்போது, சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். ஆனால், இன்று நிகழப்போகும் சந்திர கிரகணத்தில் இந்த மூன்றும் அவ்வாறு நேர்கோட்டில் இருக்காது. சூரியனின் கதிர்கள் பூமி மீது விழுந்து பூமியின் அரைநிழற் பகுதியில் நிலவு வரும். இதனை ஆங்கிலத்தில் Penumbral Lunar Eclipse என்கிறார்கள்.
 
ஓநாய் சந்திர கிரகணம் என்றால் என்ன?
 
Penumbral Lunar Eclipse அன்று முழு நிலவாக இருந்தால் இதைத்தான் ஓநாய் சந்திர கிரகணம் என்கிறார்கள். கிரகண சமயத்தில் நாம் எப்போதும் பார்க்கும் வண்ணத்தில் நிலவு இருக்காது. அதனால்தான் இந்த கிரகணம் சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது.
 
ஓநாய் சந்திர கிரகணம் தமிழகத்தில் தெரியுமா?
 
வானில் மேகக்கூட்டங்கள் இல்லாத வரை தமிழகத்தில் இந்த சந்திர கிரகணத்தை தாரளாமாக பார்க்க முடியும். இந்திய நேரப்படி, இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.37 மணி முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.42 மணி வரை சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். 12.41 மணியளவில் சந்திர கிரகணம் முழுமையான அளவை எட்டும்.
 
சந்திர கிரகணத்தின் நேரலையை எங்கு காண முடியும்?
 
சந்திர கிரகணம் குறித்த நேரலை காட்சிகளை சர்வதேச அளவில் பல யுடியூப் பக்கங்களில் நேரலையில் காணலாம். காஸ்மோ சாப்பியன்ஸ் என்ற யுடியூப் தளத்தின் லிங்கை இங்கே கொடுத்துள்ளோம். இதில் நேரலை காட்சிகளை பார்க்கலாம்.
 
அடுத்த சந்திர கிரகணம் எப்போது நிகழும்?
 
இந்தாண்டு நான்கு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன. ஜனவரி 10-ஐ தவிர்த்து, ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன.