1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (09:26 IST)

இந்தியாவிற்கு ஆதரவாக விராட், சச்சின் ட்விட்டரில் பதிவு – டிரண்டாகும் ஹாஷ்டேக்

கடந்த சில மணி நேரங்களாக ட்விட்டரில் இந்திய அளவில் IndiaTogether, IndiaStandsAgainstpropaganda என்ற ஹாஷ்டேகுகள் டிரண்டாகி வருகின்றன.
 
இதற்குக் காரணம் இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பாப் பாடகி ரிஹானா உட்பட சர்வதேச பிரபலங்களின் ட்விட்டர் பதிவுகள் ஆகும்.
 
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
 
நேற்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா, இந்தியாவில் விவசாயிகள் போராடும் இடங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது என்ற செய்தி ஒன்றைப் பகிர்ந்து `இது குறித்து நாம் ஏன் பேசவில்லை?` எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
 
ட்விட்டர் பக்கத்தில் 10 கோடிக்கும் அதிகமானோர் இவரைப் பின்தொடருவதால், விவசாயிகள் போராட்ட விவகாரத்தை இவர் ட்வீட் செய்த அடுத்த நொடியே இரண்டு லட்சத்துக்கும் அதிகமான முறை அந்த பதிவு ரீ-ட்வீட் செய்யப்பட்டது. 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த பதிவுக்கு பதில்களை பதிவிட்டிருந்தனர்.
 
இந்நிலையில் அவரைத் தொடர்ந்து முன்னாள் ஆபாசப் பட நடிகையான மியா காலிஃபாவும் விவசாயிகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
 
அதேபோல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். "இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவாக நிற்கிறோம்," என அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
 
இவர்கள் மட்டுமின்றி அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா ஹாரிஸும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகக் கருத்துகளை பகிர்ந்திருந்தார்.
 
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திடீரென இந்த விவகாரத்தில் தலையிட்டு எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் அறிக்கை ஒன்றை பகிர்ந்திருந்தது.
 
அதன் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா மூலம் பகிரப்பட்ட அந்த அறிக்கையில், "இந்தியாவின் சில பகுதிகளில் மிகவும் சொற்பமான விவசாயிகள் மட்டுமே அரசின் சீர்திருத்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக உள்ளனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதுவரை பதினோரு சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பிரதமரின் சார்பில் அந்த சட்டங்களை தள்ளிவைக்கும் திட்டம் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
எதிர்ப்பு தெரிவிக்கும் கிரிக்கெட் வீரர்கள்
இதனை தொடர்ந்து இந்தியாவில் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் IndiaTogether என்ற ஹாஷ்டேகில் ட்விட்டரில் தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.
 
நடிகர் அக்ஷய் குமார், "இந்தியாவின் மிக முக்கியமான அங்கம் விவசாயிகள். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதி வழியில் இணக்கமான தீர்வு காணும் முயற்சிக்கு நாம் ஆதரவளிப்போம். அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமே தவிர பிளவுபடுத்தும் எவர் மீதும் கவனம் செலுத்தக் கூடாது," என்று கூறியுள்ளார்.
 
பாலிவுட் பிரபலங்களை தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஷிகார் தவான் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் ட்விட்டரில் IndiaTogether என்ற ஹாஷ்டேகில் பதிவிட்டுள்ளனர்.
 
சச்சின் டெண்டுல்கர், "இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டினர் பார்வையாளர்களாக இருக்கலாம் ஆனால் பங்கேற்பாளர்களாக இருக்கக்கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்கு தெரியும். அவர்கள் இந்தியாவிற்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்." என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
விராட் கோலி, "வெவ்வேறு கருத்துக்கள் எழுந்துள்ள இந்த சூழ்நிலையில் அனைவரும் ஒன்றிணைவோம். விவசாயிகள் நாட்டின் ஒருங்கிணைந்த ஒரு அங்கம். அனைத்து தரப்பினரிடையே அமைதி நிலவி எதிர்காலத்தை நோக்கி செல்ல இணக்கமான ஒரு தீர்வு எட்டப்படும் என நான் உறுதியாக இருக்கிறேன்," எனப் பதிவிட்டுள்ளார்.
 
முடிவை எட்டாத பேச்சுவார்த்தைகள்
நவம்பர் மாதம் முதல் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இது அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் இதுவரை 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
 
இந்த வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் விவசாயிகள் தரப்பில் சட்டங்களைத் திரும்ப பெறுவதே தங்களின் ஒரே கோரிக்கை என்று தெரிவித்துள்ளனர்.