புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (18:12 IST)

பாம்புத் தீவில் ரஷ்ய போர் கப்பலை எதிர்த்து நின்ற யுக்ரேனிய வீரர்கள் கதி என்ன?

ரஷ்ய படையெடுப்பின் முதல் நாளன்று ஸ்மீன்யீ (பாம்பு) தீவினை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இறந்ததாக நம்பப்பட்ட 13 யுக்ரேனிய வீரர்கள் நிலை பற்றிய தகவல்கள் வந்துள்ளன.
 
தங்களை நோக்கி வந்த ரஷ்ய போர்க்கப்பலிடம் 'நரகத்துக்கு செல்லுங்கள்' என அவர்கள் சொல்லும் காணொளியைக் கேட்ட யுக்ரேனிய அதிபர், அந்த வீரர்களுக்கு மரணத்துக்குப் பின் வழங்கப்படும் மரியாதையை வழங்கினார்.
 
அந்தத் தீவில் இருந்த துருப்புகள் சரணடைந்ததாக ரஷ்யா அப்போது அறிவித்திருந்தது. இந்த நிலையில், தங்களுடைய 'ஆயுதமேந்திய சகோதரர்கள் உயிருடனும் நலமாகவும்' இருப்பதாக யுக்ரேனிய கடற்படைதிங்கள்கிழமை ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தது.
மேலும், அந்த எல்லை பாதுகாப்பு வீரர்கள் 'ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்களை இரு முறை துணிவுடன் விரட்டியடித்தனர்'. ஆனால், குண்டுகள் தீர்ந்ததால், அவர்களால் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியவில்லை, என்று அந்தப் பதிவு சொல்கிறது.
 
ரஷ்ய படைகள், கலங்கரை விளக்கங்கள், கோபுரங்கள், ஆன்டெனாக்கள் போன்ற 'அத்தீவின் கட்டமைப்பை முழுமையாகச் சிதைத்து', மைய நிலப்பரப்புடனான தொடர்பைத் துண்டித்துவிட்டன, என்றும் சொல்கிறது யுக்ரேனிய பாதுகாப்புத்துறையின் பதிவு.
 
தாக்குதலுக்குப் பிறகு, மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை மீட்டு வர பாம்புத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஒரு உதவிக்கப்பலின் குழுவினரையும், அவர்களுடன் இருந்த இரண்டு பாதிரியார்களையும் ரஷ்யா சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருப்பதாக யுக்ரேனிய கடற்படை தெரிவித்துள்ளது.
 
"ராணுவ பணி அல்லாத ஒன்றுக்காக சென்ற, போரிடாத சிவிலியன் கப்பலை ரஷ்யா கைப்பற்றியிருப்பது. போரின் விதிகளையும் நடைமுறைகளையும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தையும் மீறுவதாகும்," என்று யுக்ரேன் எச்சரித்திருக்கிறது.
 
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரு ரஷ்ய ராணுவ செய்திதொடர்பாளர், ஸ்மீன்யீ தீவில் 82 யுக்ரேனிய வீரர்கள் 'தாமாகவே தங்கள் ஆயுதங்களை கைவிட்டுச் சரணடைந்ததாக' கூறினார். ஆனால், ரஷ்ய போர்க்கப்பல் அங்கு தாக்குதல் நடத்தியதா இல்லையா, உயிர் சேதம் ஏற்பட்டதா போன்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
 
பிடிபட்ட கைதிகள் 'தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட' கோரப்பட்டிருப்பதாகவும், அவர்கள் 'விரைவில் தங்கள் குடும்பங்களிடம் திருப்பி அனுப்பப்படுவார்கள்' என்றும் அவர் கூறினார்.
 
பாம்புத்தீவு எங்குள்ளது?
ஸ்மீன்யீ தீவு கருங்கடலின் வடமேற்கே அமைந்துள்ளது. யுக்ரேனிய கடற்கரையிலிருந்து 48 கி.மீ தூரத்திலும் ரஷ்யா 2014இல் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ள கிரைமியாவிலிருந்து 300 கி.மீ தூரத்திலும் இந்தத் தீவு உள்ளது.
 
40 ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்ட இச்சிறிய தீவு, தனது பரப்பையும் மீறிய முக்கியத்துவம் கொண்டுள்ளது. அட்லான்டிக் கவுன்சில் சிந்தனை மையம், இத்தீவினை 'யுக்ரேனின் கடல் எல்லைக்கான உரிமை கோரல்களின் மையப்புள்ளி' என்கிறது.