ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (13:56 IST)

யுக்ரேன் போர்: வேக்யூம் வெடிகுண்டு என்றால் என்ன?

வேக்யூம் வெடிகுண்டு எனப்படும் தெர்மோபரிக் ஆயுதம் என்றால் என்ன, ரஷ்யா அவற்றை யுக்ரேனில் பயன்படுத்தியுள்ளதா?

யுக்ரேனில் நடந்த சண்டையில் ரஷ்யா தெர்மோபரிக் ஆயுதம் அதாவது வேக்யூம் வெடிகுண்டைப் பயன்படுத்தியதாக மனித உரிமைக் குழுக்களும் அமெரிக்காவுக்கான யுக்ரேன் தூதரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

திங்களன்று யுக்ரேனின் சுமி பிராந்தியத்தில் உள்ள ஒக்திர்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அழித்த வெடிப்பு ஒரு தெர்மோபரிக் ஆயுதத்தால் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது, இருப்பினும் இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

பரவலாக தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வடகிழக்கு யுக்ரேனில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை ரஷ்யா தாக்கியதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.

சுற்றுப்புற காற்றில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சி அதிக வெப்பநிலை வெடிப்பை உருவாக்கும் தெர்மோபரிக் ஆயுதங்களை, மனித உரிமை அமைப்புகள் எதிர்க்கின்றன.

ஆனால் இந்த ஆயுதங்கள் எப்படிப்பட்டவை? அவை ஏன் அச்சத்தை ஏற்படுத்துகின்றன? என்பதை பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் விளக்கினார். "அவர்களின் [ரஷ்ய] ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த, அணுவாற்றல் அல்லாத ஆயுதம் இது" என்று அவர் கூறினார்.

வேக்யூம் குண்டுகள் எவ்வாறு வேலை செய்கின்றன?

தெர்மோபரிக் வெடிபொருட்கள் என்றும் அழைக்கப்படும் வாக்யூம் குண்டுகள் இரண்டு நிலைகளில் வேலை செய்கின்றன.

முதல் நிலையில் வெடிக்கும் மின்னூட்டமானது, எரிபொருளை சிதறடித்து மேகத்திரள் போன்ற ஒன்றைத் தோற்றுவிக்கும். இது கட்டிடங்களுக்குள் நுழையும். பொருட்களைச் சுற்றி வளைக்கும். இரண்டாம் நிலை, இந்த மேகத்திரள் பற்றும். இது ஒரு பெரிய நெருப்புப்பந்தை ஏற்படுத்துகிறது. சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சி அதிர்வு அலையை ஏற்படுத்துகிறது.

"ஒரு சாதாரண வெடிபொருளின் எடையில் 30% எரிபொருளாகவும், 70% ஆக்சிடைசராகவும் இருக்கும். ஆனால் தெர்மோபரிக் வெடிமருந்தில் முழு எடையுமே எரிபொருளாக இருக்கும்.அது காற்றில் உள்ள ஆக்சிஜனைப் பயன்படுத்துகிறது. எனவே அவை மிகவும் சக்திவாய்ந்தவை,"என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் ரிசர்ச் ஃபெலோ, ஜஸ்டின் பிராங்க் குறிப்பிட்டார்.

விளைவுகள் என்ன?

இதன் வெப்பம் மற்றும் அழுத்தத்தின் விளைவுகள் மிகவும் வலிமையானவை . ஆரம்ப வெடிப்பில் சிக்கிய எவரும் உடனடியாக ஆவியாகிவிடுவார்கள். சுற்றியுள்ள பகுதியில் மாட்டிக்கொள்ளும் எவருக்கும் அதிர்ச்சி அலை காரணமாக கடுமையான உள் காயங்கள் ஏற்படும்.

"அவை மிகவும் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு அலைகளை உருவாக்குவதன் மூலம் ,உடல் உறுப்புக்களை சிதைக்கும் மற்றும் நுரையீரலை கிழிக்கும் அல்லது வெடிக்கச்செய்யும்," என்று ப்ரோங்க் கூறினார்.

"இந்த அதிர்ச்சி அலையானது மூடியிருக்கும் இடங்களில் பரவும். எனவே பாதாள அறைகள் அல்லது குகைகள் போன்ற இடங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இது மிகவும் ஆபத்தானது. அவை பல ஆயிரம் டிகிரி வெப்பநிலையை உருவாக்குகின்றன. இது பயங்கரமான தீக்காயங்களை ஏற்படுத்தும்."

அவை யுக்ரேனில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எங்கே?

அமெரிக்காவுக்கான யுக்ரேன் தூதர் ஒக்ஸானா மார்கரோவா, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

" ரஷ்யா இன்று வேக்யூம் குண்டை பயன்படுத்தியது. ரஷ்யா யுக்ரேனில் ஏற்படுத்த முயற்சிக்கும் பேரழிவு மிகப்பெரியது" என்று மார்க்கரோவா குறிப்பிட்டார்.

TOS-1 ராக்கெட் ஏவுகணை செலுத்துவாகனங்கள், ரஷ்ய நகரமான பெல்கோரோட் அருகே கொண்டு செல்லப்படுவதை, யுக்ரேனிய எல்லைக்கு அருகில் இருந்து CNN செய்தியாளர் பதிவுசெய்த காட்சிகள் காட்டுகின்றன.

சமூக ஊடகங்களில் உறுதிசெய்யப்படாத பல வீடியோக்கள் பரவி வருகின்றன. எல்லைக்கு அருகிலுள்ள நாட்டின் பிற பகுதிகளுக்கு TOS-1 கொண்டுசெல்லப்படுவதை அந்த வீடியோக்கள் காட்டுகின்றன. மேலும் வெடிப்பைக் காட்டுவதாகக் கூறும் பல்வேறு ட்விட்டர் வீடியோக்களும் பகிரப்படுகின்றன. இருப்பினும், பிபிசியால் இவற்றை சொந்தமாக சரிபார்க்க முடியவில்லை.

அவை வேறு எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளனவா?

இந்த ஆயுதங்கள் 1960 களில் இருந்து ரஷ்ய மற்றும் மேற்கத்திய படைகளால் பயன்படுத்தப்படுகின்றன. அல்-காய்தா பதுங்கியிருப்பதாகக் கருதப்படும், ஆப்கானிஸ்தானில் உள்ள குகை வளாகங்களைத் தாக்குவதற்கு அமெரிக்கா முக்கியமாக அவற்றைப் பயன்படுத்தியது.

2000 ஆம் ஆண்டில் இந்த ஆயுதங்கள் செச்சென்யாவில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ரஷ்யாவைக் கண்டித்தது. மிக சமீபத்தில், ரஷ்யா மற்றும் சிரியா அரசுகள், சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தெர்மோபரிக் குண்டுகளை பயன்படுத்தியதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

செச்சன்யாவில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டதைப்போலவே பெரிய யுக்ரேனிய நகரங்களின் நகர்ப்பகுதிகளில் இத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் உயிரிழக்கக்கூடும்.