வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 7 மே 2020 (14:32 IST)

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதில் பின்னடைவு

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் இந்திய அரசின் முயற்சியில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சில விமான ஊழியர்களின் கோவிட்-19 தொற்று பரிசோதனைக்கான முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் தாமதமாகப் புறப்பட உள்ளன.

வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முதல் விமானம், இன்று இரவு காலை 11:15 மணியளவில் தலைநகர் டெல்லியிலிருந்து சிங்கப்பூர் புறப்படவுள்ளது.

தொடர்ந்து, மும்பையிலிருந்து லண்டனுக்கு கிளம்பும் இரண்டாவது விமானம் ஒன்று, வெள்ளிக்கிழமை காலை கிளம்பவுள்ளது.

அடுத்த ஒரு வார காலத்தில் மட்டும், அமெரிக்கா, பிரிட்டன், சௌதி அரேபியா, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து சுமார் 15 ஆயிரம் இந்தியர்கள் 60க்கும் மேற்பட்ட விமானங்களில் இந்தியா திரும்ப உள்ளனர்.

இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் இந்த பணியில் இந்திய கடற்படை கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.

அரபு நாடுகளுக்கு அதிக விமானங்கள்

வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்திய கடற்படை கப்பல்கள் தயாராக உள்ளதாக அதன் தளபதி கரம்பீர் சிங் மே ஒன்றாம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

இதனிடையே சௌதி அரேபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டுக்கு திரும்ப அழைத்து வருவதற்காக ஏர் இந்தியாவின் ஐந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று சௌதியில் உள்ள இந்தியத் தூதரகம் பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விமானங்களில் முதல் விமானம் நாளை, மே 8ஆம் தேதி, சௌதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு சுமார் 200 பேருடன் புறப்பட உள்ளது என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிவர இதுவரை சுமார் 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், மிகுந்த தேவை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்தியக் குடிமக்களில் சுமார் 70% பேர் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர்.
தங்கள் வேலைகளை இழந்த பல இந்தியர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதால் வளைகுடா நாடுகளில் இருப்பவர்களை திரும்ப அழைத்து வர முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்திய அரசுக்கும் சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்பி அனைவரும் விமான கட்டணத்தை அவர்களாகவே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இந்தியா வந்த பின்னர் அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மார்ச் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

இந்திய ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி வெவ்வேறு நாடுகளிலிருந்து சுமார் 2 லட்சம் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்து வரப்படுவார்கள்.

இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவேறினால் வரலாற்றிலேயே அதிகபட்ச எண்ணிக்கையிலான வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை இந்திய அரசு திரும்ப அழைத்து வருவது இதுவே ஆகும்.

இதற்கு முன்னதாக வளைகுடா போர் நடந்தபோது குவைத்திலிருந்து தங்கள் நாட்டுக் குடிமக்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை இந்தியா சொந்த நாட்டுக்குத் திரும்ப அழைத்து வந்ததே 1990 முதல் அதிகபட்ச எண்ணிக்கையாக விளங்குகிறது.