அரசியல் நுழைவு: 'காலா' விழாவில் ரஜினியின் பேச்சு எதைக் காட்டுகிறது?

rajinikanth
Last Modified வெள்ளி, 11 மே 2018 (12:17 IST)
தான் நடித்த காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி காந்த் ''காலா அரசியல் படம் கிடையாது ஆனால் படத்தில் அரசியல் இருக்கும்'' என்றார். இது உட்பட இந்த நிகழ்வில் அவர் பேசிய பல விஷயங்கள் அவரது அரசியல் பிரவேசம் குறித்து மீண்டும் விவாதங்களைத் தொடங்கிவைத்துள்ளன. இந்தப் பேச்சு அவரது அரசியல் நுழைவு குறித்து எதை உணர்த்துகிறது? அரசியல் தலைவர்களும் பார்வையாளர்களும் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?கபாலி படம் முடிந்த பின்னர் நல்ல படம் நடிக்க வேண்டும் என்று எண்ணியபோது இயக்குநர் வெற்றிமாறன் அரசியலை கருவாக கொண்ட படத்தை சொன்னபோது மறுத்துவிட்டதாக கூறிய ரஜினி, காலா படத்தில் அரசியல் இருந்தாலும் அது அரசியல் படம் அல்ல என்று தெரிவித்தார்.

அரசியலுக்கு தான் வரும் காலம் இன்னும் வரவில்லை என்றும் ''நல்ல நேரம் வரும்'' அப்போது களத்தில் இறங்குவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் குரல் கோடிக்கணக்கான மக்களை ஈர்த்தது என்றும் அந்த குரலை மீண்டும் கேட்கவேண்டும் என்று ஆசையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ரஜினி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவனிடம் கேட்டபோது, ''தலைவர் கருணாநிதியின் குரலை கேட்கவேண்டும் என ரஜினி கூறியுள்ளது கருணாநிதியின் மீதான அவரது பாசத்தை காட்டுகிறது. கருணாநிதியின் பேச்சைப் பலரும் விருப்பத்துடன் கேட்பார்கள். அவர்களில் ஒருவராக ரஜினி இருக்கிறார். இதற்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை,'' என்றார்.


rajinikanth


மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது, ''ஆடிட்டர் குருமூர்த்தி வெளிப்படையாக பாஜகவின் ஆதரவாளராக அறியப்படுபவர். அவர் தற்போது ரஜினி தமிழகத்திற்கு தலைமை ஏற்பது சிறந்தது என்று கூறியுள்ளது, தமிழகத்தில் பாஜகவிற்கு ரஜினி ஒரு முகமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துவதாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ரஜினி தனித்து போட்டியிடுவதையே விரும்புகிறார் என்று தோன்றுகிறது,'' என்றார் டி.கே.எஸ் இளங்கோவன்.

தற்போதுவரை நல்லநேரம் வரவில்லை என்று கூறும் ரஜினி முதலில் தனது அரசியல் கொள்கைகள் என்ன, இலக்கு என்ன என்பதை தெளிவாகவே சொல்லவேண்டும் என்றார் இளங்கோவன். ''வெறும் ரசிகர் மன்றங்களைக் கொண்டு அரசியல் கட்சி நடத்தமுடியாது. அரசியல் கட்சியின் கொள்கையை சொன்னால்தான், அதில் விருப்பம் கொண்டமக்கள் அவருக்கு ஆதரவு தருவார்கள். குழப்பத்திலேயே மக்களை வைத்திருந்தால், அது அவருக்கும் பலன்தராது,'' என இளங்கோவன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என்று கூறிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினியை தூண்டிவிடாமல் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.


''ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தியாகக் கூடாது. ரஜினியை தூண்டிவிடாமல் இருக்கவேண்டும். அவரை உசுப்பேத்திவிடாமல் இருப்பது நல்லது. பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு உள்ளது. காமாலைக்காரர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியும். வெற்றிடம் என பேச்சுக்கே இடம் இல்லை. ரஜினி அரசியலுக்கு வருவது என்பது அவரது தனிப்பட்ட முடிவு. அதை நாங்கள் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை,'' என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் கூறினார்.

ஆனால் ரஜினி மீண்டும் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு சரியான நேரம் இன்னும் வரவில்லை என்று கூறுவதற்குப் பின்புலம் இருக்கலாம் என்கிறார் அரசியல் விமர்சகர் ஆழி செந்தில்நாதன்.


''தனக்கென ஒரு கட்சியை அறிவித்துவிட்டுப் பிற அரசியல் வேலைகளை செய்வதற்கு பதிலாக இன்னும் நேரம் வரவில்லை என்று கூறுவது, தேர்தல் நெருங்கும் சமயத்தில் வேறு ஒரு கட்சியின் முகமாக இவர் வருவதற்கு முற்படுகிறார் என்பதுபோலத் தோன்றுகிறது. தற்போது பாஜகவைச் சேர்ந்தவர்கள் ரஜினிக்கு ஆதரவாக என்பதைவிட, தேர்தலில் அவர் தங்களுக்கு பலமாக இருப்பார் என்று நம்புவதாக சொல்லி வருகிறார்கள். அதற்கு ரஜினியும் உடன்படுகிறார் என்றே சொல்லவேண்டும்,'' என்றார் ஆழி செந்தில்நாதன்.

ஆரம்ப காலத்தில் தனது ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காகவும், தன்னுடைய படங்களை விளம்பரம் செய்வதற்காகவும் அரசியலை ஒரு துருப்புசீட்டாக பயன்படுத்துகிறார் என்றே தோன்றியது என்ற அவர், ''சமீபமாக அவரது பேச்சுகளை கேட்டால், அவர் தேர்தலில் பங்கெடுப்பது உறுதி என்பதை காட்டுகிறது. தேர்தலில் வெற்றி அல்லது தோல்வி அடைவது என்பதை தாண்டி, அவரது பங்கேற்பு உறுதியாகிவிட்டது என்றே சொல்லவேண்டும்,'' என்றார் ஆழி செந்தில்நாதன்.


இதில் மேலும் படிக்கவும் :