வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (13:03 IST)

நேபாளத்தின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல்

உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச்  சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அந்நாட்டின் புதிய தேசிய சின்னத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
 
1816 இல் ஆங்கிலேயர்கள் மற்றும் நேபாளம் தரப்பினரிடையே கையெழுத்திடப்பட்ட சுகாலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் லிம்பியாதுரா பகுதியில்தான் மகாகாளி நதியின் மூலம் இருப்பதாக நேபாள அரசு கூறி வருகிறது. ஆனால் அதனை ஏற்க மறுக்கும் இந்தியா, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளுக்கு  கிழக்கேதான் அந்த நதி உருவாவதாக கூறுகிறது.
 
இந்நிலையில்தான் புதிய வரைபடத்திற்கு நேபாளம் நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
இதனை அந்நாட்டு எம்.பி.க்கள் தங்கள் மேஜைகளை தட்டி வரவேற்றனர்.இந்த சட்டத்திருத்தத்தை அந்நாட்டு அதிபர் தேவி பந்தாரி கையெழுத்திட்ட பிறகு  அதிகாரப்பூர்வமாகும். இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு இந்திய அரசு பதிலளிக்காமல் இருப்பதற்கு நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் கவலை  வெளியிட்டுள்ளார்.
 
"எல்லைப் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும், இந்தியாவில் இருந்து எந்த பதிலும் இன்னும் வராதது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா மற்றும் சீனாவால் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை களைய முடியும் என்றால் சீனா மற்றும் நேபாளத்திற்கு இடையேயும் இது சாத்தியம்தான். இந்தியா விரைவில்  பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளும் என நம்புகிறேன்" என அமைச்சர் பிரயிப் க்யவாலி தெரிவித்துள்ளார்.
 
ஆனால், கோவிட் 19 நெருக்கடி முடிந்த பின்னர்தான் எல்லைப் பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இந்தியா கூறிவிட்டது.
 
வெளியுறவுத்துறை செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே நேபாளம் அழைப்பு விடுத்துள்ளதாக சில ஊடக செய்திகள்  தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு இந்தியாவின் பதில் என்ன என்பது இன்னும் தெளியாக தெரியவரவில்லை.
 
பின்னனி என்ன?
 
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்த நாட்டின் அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
 
மகாகாளி (சாரதா) நதி தொடங்கும் இடம் தங்கள் நாட்டு எல்லைக்குள் இருக்கிறது என்று நேபாளம்அரசு கூறுகிறது. ஆனால் அதை இந்திய அரசு மறுக்கிறது.

சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலை ஒன்றை இந்தியா தொடங்கிய 10 நாட்களுக்கு பின்னர் நேபாளம் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த சாலையை இந்தியா திறந்ததற்கு நேபாள  வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
 
மே எட்டாம் தேதி அன்று காலாபானி, குஞ்சி பகுதிகள் வழியாக லிபுலேக் கணவாய் செல்லும் சாலையை இந்திய அரசு தன்னிச்சையாக திறந்த பின்பு காலாபானி மற்றும் லிபுலேக் பகுதிகள் தங்களுக்கு சொந்தமானவை என்றும் கூறிய நேபாள அரசு, நேபாளத்தில் உள்ள இந்திய தூதர் மற்றும் டெல்லியிலுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியோரிடம் தனது கவலைகளை வெளியிட்டிருந்தது.
 
நேபாள அரசு புதிய வரைபடத்தை அங்கீகரிப்பதற்கு முன் தலைநகர் காத்மண்டுவில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மான எதிர்ப்புக் குரல்களுடன் கூடிய விவாதமும் நிகழ்ந்திருந்தன.