வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (15:32 IST)

நடிகையிடம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் அகாடமி; என்ன காரணம்?

50 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்கர் மேடையில் கேலி செய்யப்பட்ட அமெரிக்க பூர்வகுடி செயல்பாட்டாளரும் நடிகையுமான சசீன் லிட்டில்ஃபெதரிடம் ஆஸ்கர் அகாடமி மன்னிப்பு கேட்டுள்ளது.


'தேவையற்ற, நியாயமில்லாத கொடுமை' லிட்டில்ஃபெதருக்கு நடந்ததாக அகாடமி தனது மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. திரைத்துறையில் புரையோடியிருந்த புறக்கணிப்புகளையும் இனவெறுப்பையும் காட்டுவதாக இந்தச் சம்பவம் அமைந்தது.

ஆஸ்கர் மேடையில் என்ன நடந்தது?

தி காட்பாதர் திரைப்படத்தில் நடித்ததற்காக பிரபல நடிகர் மார்லன் பிராண்டோவுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விருதைப் பெறுவதற்கு மார்லன் பிராண்டோ விரும்பவில்லை.

அமெரிக்காவின் சினிமா துறையில் பூர்வகுடி அமெரிக்கர்களை தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி தனக்கு அறிவிக்கப்பட்ட விருதை மார்லன் பிராண்டோ நிராகரித்தார். அவருக்குப் பதிலாக மேடையேறி அந்த விருதை நிகாரிப்பதற்காக லிட்டில்ஃபெதர் ஆஸ்கர் மேடைக்கு வந்தார்.

அது 1973ஆம் ஆண்டு. அந்தக் காட்சி தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போது 26 வயதான லிட்டில்ஃபெதரை கூடியிருந்தவர்கள் கேலி செய்தார்கள். திரை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டார். அந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது லிட்டில்ஃபெதருக்கு வயது 75.

ஆஸ்கர் அகாடமி மன்னிப்புக் கோரியிருப்பது பற்றிக் கேட்டபோது, "இதைக் கேட்கும் நாளைக் காணும் வரையில் நான் வாழ்வேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை," என்று அவர் ஹாலிவுட் ரிப்போர்ட்டரிடம் கூறினார்.

ஆஸ்கர் மேடையில் லிட்டில்ஃபெதர் பேசிய அந்த 60 நொடிகள் நீடித்த உரை தான் ஆஸ்கர் நேரலையில் பேசப்பட்ட முதல் அரசியல் உரை. அதன் பிறகு இன்று வரைக்கும் ஆஸ்கர் மேடை அவ்வப்போது அரசியல் மேடையாகிவிடுகிறது.

பூர்வகுடி நடிகையைக் கேலி செய்தது ஏன்?
1973ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டபோது மார்லன் பிராண்டோவுக்கு பதிலாக லிட்டில் வருவதையே பலரும் வியப்போடு பார்த்தார்கள். பூர்வகுடி அமெரிக்கர்களின் பாரம்பரிய உடையில் அவர் வந்திருந்தார்.

காட்ஃபாதர் திரைப்படத்துக்காக மார்லன் பிராண்டோவுக்கு விருது வழங்கப்படுவதாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர் மூர், நடிகை லிவ் உல்மன் ஆகியோர் அறிவித்தனர். விருதை எடுத்து அதை வழங்குவதற்காக மேடையில் காத்திருந்தனர். மேடைக்கு வந்த லிட்டில்ஃபெதர் விருதைப் பெறுவதற்கு மறுத்துவிட்டு உரையைத் தொடங்கினார்.

தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், மார்லன் பிராண்டோ கேட்டுக் கொண்டதன்படி அவருக்குப் பதிலாக வந்திருப்பதாகவும் விருதை நிராகரிக்குமாறு அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.

உண்மையில் மார்லன் பிராண்டோ சற்று நீளமான உரையைத் தயாரித்து வழங்கியிருந்தார். ஆனால் விருதை நிராகரிப்பது தொடர்பாக 60 நொடிகள் பேசினால் போதும் என்று ஆஸ்கர் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறியதைத் தொடர்ந்து எழுதி வைத்திருந்த நீண்ட உரையைத் தவிர்த்துவிட்டு சுருக்கமாகப் பேசினார் லிட்டில்ஃபெதர்.

"இந்த விருதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை வருத்தத்துடன் கூறுகிறேன்" என்று அவர் கூறியபோது பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த விருதை மார்லன் பிராண்டோ ஏற்றுக் கொள்ள முடியாததற்குக் காரணம், "பூர்வகுடி அமெரிக்கர்களை திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தவறாகச் சித்தரிக்கப்படுவதும் முழங்காலிடவைத்த சமீபத்திய நிகழ்வுகளும்தான்" என்று லிட்டில்ஃபெதர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அந்தக் காலகட்டத்தில் பூர்வகுடி அமெரிக்கர்களை சில பாதுகாப்பு அதிகாரிகள் தாக்கிய சம்பவத்தை அவர் இந்த வகையில் நினைவுகூர்ந்தார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பார்வையாளர்களாக இருந்த திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கேலி செய்யும் விதமாக ஆர்ப்பரித்தனர். ஆயினும் சில நொடிகள் இடைவெளிவிட்டு தனது உரையைத் தொடர்ந்தார் லிட்டில்ஃபெதர்.

உரை முடிந்ததும் இரண்டு காவலர்கள் தன்னை பாதுகாப்புடன் வெளியே கொண்டு வர வேண்டியிருந்தது என்று 2020-இல் பிபிசிக்கு அளித்த பேட்டியில் லிட்டில்ஃபெதர் குறிப்பிட்டிருந்தார்.

"அப்போது மேடையின் பின்புறம் இருந்த நடிகர் ஜான் வெய்ன் என் மீதும் மார்லன் பிராண்டோ மீதும் ஆவேசமாக இருந்தார். விட்டால் என்னை அவரே மேடையை விட்டு இழுத்திருப்பார். நல்லவேளையாக அவரை ஆறு பாதுகாவலர்கள் பாதுகாத்தார்கள்" என்று லிட்டில்ஃபெதர் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

மேடையில் இருந்து நடந்து செல்லும்போது அமெரிக்கப் பூர்வகுடிகளை இழிவுபடுத்தும் வகையிலான சைகையைச் சிலர் செய்ததாகவும் லிட்டில்ஃபெதர் நினைவு கூர்கிறார். மார்லன் பிராண்டோ சார்பில் லிட்டில்ஃபெதர் மேடை ஏறியதையும் விருதை நிராகரித்ததையும், அவரைக் கூடியிருந்த திரை உலகினர் நிராகரித்ததையும் எட்டரை கோடி மக்கள் தொலைக்காட்சி மூலமாக நேரலையில் பார்த்தார்கள்.

ஆஸ்கர் மேடையைத் தாண்டியும் அவமதிப்பு

லிட்டில்ஃபெதருக்கு நடந்த அந்தக் கொடுமை ஆஸ்கர் மேடையுடன் முடிந்துவிடவில்லை. அந்த நிகழ்வு நடந்த பிறகும் அவர் பொதுவெளியில் பல அவமதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

லிட்டில்ஃபெதர் உண்மையில் ஒரு பூர்வகுடி அமெரிக்கரே கிடையாது. சினிமாவில் தமக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியோர் உரையை நிகழ்த்துவதற்கு அவர் ஒப்புக்கொண்டார் என்று பல ஊடகங்கள் கூறின. இன்னும் சிலர் அவர் மார்லன் பிராண்டோவின் பாலியல் துணையாக இருக்கலாம் என்றும் கூறினார். ஆனால் அவை அனைத்தும் பொய்யானவை என்று லிட்டில்ஃபெதர் தனது பிபிசி பேட்டியில் கூறினார்.