1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (15:03 IST)

பிச்சை எடுக்கும் போலீஸ் "என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்" - என்ன நடந்தது?

மத்திய பிரதேச காவல்துறையில் உதவி ஆய்வாளராகவும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிட் ஆகவும் அறியப்பட்ட அதிகாரி, குவாலியர் நகர வீதிகளில் பிச்சைக்காரரை போல வலம் வரும் காட்சி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
 
மணிஷ் மிஸ்ரா என்ற அந்த அதிகாரி 1999ஆம் ஆண்டில் மத்திய பிரதேச காவல்துறையில் உதவி ஆய்வாளராக சேர்ந்தார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர் கடைசியாக 2005ஆம் ஆண்டில் தாட்டியா மாவட்டத்தில் பணியாற்றியதாக அவரைப் பற்றி அறிமுகமானவர்கள் கூறுகின்றனர்.
 
இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி தேர்தல் பணிக்காக ரோந்துப் பணியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ரத்னேஷ் சிங்கும் விஜய் சிங் பதோரியாவும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த ஓர் பிச்சைக்காரருக்கு உதவ முன்வந்தனர்.
 
நகரின் லஷ்கர் பகுதியில் உள்ள திருமண மண்டப வாயிலில் கிழிந்த கந்தலாடை, அழுக்கு நிறைந்த தோற்றம், வருடக்கணக்கில் சவரம் செய்யப்படாத தாடி, மீசையுடன் தோற்றம் அளித்த பிச்சைக்காரரின் நிலையைப் பார்த்து தங்களுடைய ஜாக்கெட் ஒன்றையும் காலணியையும் அவருக்கு அந்த அதிகாரிகள் வழங்கினர்.
 
பிறகு அங்கிருந்து புறப்படும்போது, இருவரையும் பார்த்து அந்த பிச்சைக்காரர் பெயரிட்டு அழைத்ததும் அந்த அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர். பிறகு அவரிடம் சென்று விசாரித்தபோதுதான் அந்த நபர் வேறு யாருமல்ல, தங்களுடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய சக உதவி ஆய்வாளர் மணிஷ் மிஸ்ரா என தெரிய வந்தது.
 
1999ஆம் ஆண்டில் காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த 250 பேரில் சிறந்த தடகள வீரராகவும் குறி பார்த்து சுடுவதிலும் நிபுணத்துவமும் பெற்ற மணிஷ் மிஸ்ரா, ஒரு முன்னாள் காவல் அதிகாரியின் மகன். அவரது மூத்த சகோதரரும் ஒரு காவல் ஆய்வாளர். தற்போது அவர் குனா மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். தமது பணியில் சில என்கவுன்ட்டர் பணிகளையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.
 
காவல் பணியில் இருந்தபோது, திடீரென அவருக்கு மனநிலை சரியில்லாததாக கூறப்பட்டது. இதையடுத்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவருக்கு அவரது குடும்பத்தார் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த நிலையில், அடிக்கடி வீட்டில் இருந்து அவர் காணாமல் போவதும் பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து சிகிச்சை தருவதும் தொடர்ந்ததாக அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இந்த நிலையில், சில ஆண்டுகளாக காணாமல் போன மணிஷ் மிஸ்ராவை கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் கொடுக்காத நிலையில், அவரை குவாலியர் வீதிகளில் ஒரு பிச்சைக்காரராக அவரது சக முன்னாள் காவல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
 
அவரை அப்படியே விட்டு விட்டுச் செல்ல விருப்பமில்லாமல் ஸ்வர்க் சதன் என்ற ஆதரவற்றோர் தங்குமிடத்தில் சேர்க்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அவருக்கு முகச்சவரம் செய்து புதிய ஆடை வழங்கி, உளவியல் மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்தனர்.
 
இருப்பினும், உளவியல் ரீதியாக மணிஷ் மிஸ்ரா பாதிக்கப்பட்டது ஏன், அவருக்கு என்ன நடந்தது, குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில் இருந்து விலகி பல ஆண்டுகளாக அவர் கவனிப்பாரற்று இருந்தது ஏன், 15 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை ஏன் அவரை கைவிட்டது? போன்ற கேள்விகளுக்கு யாரும் விடை தரவில்லை.
 
இந்த நிலையில், மணிஷ் மிஸ்ராவுடன் பணியாற்றிய மேலும் சில அதிகாரிகள், அவரது நிலையை அறிந்து அவரது சிகிச்சைக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். இது தொடர்பான செய்திகள் உள்ளூர் ஊடகங்களில் பரவலாக வெளியானதையடுத்து, முன்னாள் காவல் அதிகாரியின் நிலை அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் கூறியுள்ளன.