வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : சனி, 14 நவம்பர் 2020 (18:38 IST)

எம்.எஸ். பாஸ்கர்: "மனிதர்களைக் கவனிப்பதன் மூலமே என் பாத்திரங்களை மேம்படுத்துகிறேன்"

நீண்ட காலமாக தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துவருபவர் எம்.எஸ். பாஸ்கர்.
 
சமீபத்தில் அவர் நடிப்பில் அமெசான் ஓடிடி தளத்தில் வெளியான புத்தம்புது காலை (அவரும் நானும் அவளும் நானும்) திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் காதலித்துப் பிரிந்த மகளின் தந்தையாக, ஒரு முதியவர் வேடத்தில் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு பெரிதும் கவனிக்கப்பட்டது. அவருடன் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் நடத்திய உரையாடலில் இருந்து:
 
கே. உங்களுடைய பின்னணியைப் பற்றிச் சொல்லுங்களேன்..
 
ப. என்னுடைய சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகில் உள்ள முத்துப்பேட்டை. என்னுடைய தந்தை நிலக்கிழாராக இருந்தார். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் நாகப்பட்டினம்.
 
அங்கேதான் நான் 9ஆம் வகுப்புவரை படித்தேன். எனக்கு ஹேமமாலினி என்ற சகோதரி இருந்தார். அவர் ஒரு டப்பிங் கலைஞர். அவருடன் சென்னை வந்தேன். அக்காவுக்கு நடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது.
 
அப்போது மறைந்த நடிகர் செந்தாமரை எங்களுக்கு நெருக்கமாக இருந்தார். அவர் என்னுடைய அக்காவிடம் நடிப்பு வேண்டாம், குரல் நன்றாக இருப்பதால் டப்பிங் கலைஞராக முயற்சி செய்யலாம் என்று சொன்னார்.
 
அப்படித்தான் அக்காவுக்கு சிட்டுக்குருவி படத்தில் மீரா என்பவருக்காக பேசும் வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தை தேவராஜ் மோகன் இயக்கியிருந்தார்.
 
டப்பிங் பணிகளுக்கு அக்கா செல்லும்போது நானும் உடன் செல்வேன். மற்றவர்கள் டப்பிங் பேசுவதையும் கவனிப்பேன். வேந்தன்பட்டி அழகப்பன் என்பவர் அந்தப் படத்தில் பணியாற்றிவந்தார்.
 
அப்போது ஒரு கேரக்டருக்காக இரண்டு வசனங்களைப் பேச வேண்டியிருந்தது. அதைப் பேசும் வாய்ப்பை எனக்கு அளித்தார் அழகப்பன். அதை ஒரே டேக்கில் பேசினேன். அதில் ஒரு 25 ரூபாய் கிடைத்தது.
 
நடிக்கனும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே எனது ஆர்வம் என்றாலும், இதற்குப் பிறகு டப்பிங்கிலும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு நான் வேறு வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டேன்.
 
"இனிமேல் ஹீரோ தான். அமெரிக்க மாப்பிள்ளை வேடங்கள் கிடையாது": ஆர்.ஜே. பாலாஜி பேட்டி
நிஜ கே.ஜி.எஃப் கதை: வைர சுரங்கங்களில் ஆப்ரிக்கர்கள் சுரண்டப்படுகிறார்களா?
பிறகு 1986லிருந்துதான் சினிமா துறையில் தொடர்ச்சியாக டப்பிங் கலைஞராக பணியாற்ற ஆரம்பித்தேன். ஆரூர்தாஸ், மருதபரணி, எம்.ஏ. பிரகாஷ், தேவநாராயணன், ராஜேந்திரன் போன்றவர்கள் டப்பிங் வாய்ப்புகளை அளித்தார்கள். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக டப்பிங் பேசி வந்தேன்.
 
இதற்குப் பிறகு மாயாவி மாரீசன் என்று ஒரு தொலைக்காட்சி தொடர் வந்தது. அதில் ஒரு பாத்திரத்திற்கு டப்பிங் பேச சென்றிருந்தேன். அந்தப் படத்தின் இயக்குனர் என் நண்பர்.
 
இரண்டு வாரங்களுக்கு வருவதுபோல ஒரு பாத்திரம் இருக்கிறது, நடிக்கிறாயா என்று கேட்டார். வில்லனுக்கு நண்பனைப் போன்ற ஒரு பாத்திரம். கூடவே வந்து ஏதாவது சேட்டை செய்து அடிவாங்கி ஓடுவதைப் போன்ற பாத்திரம். அதில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்தேன்.
 
அதில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது, அங்கே இருந்த எழுத்தாளர் ஒருவர், என் நடிப்பைப் பார்த்து 'இவனை விடாதே தொடர்ச்சியாக நடிக்க வைத்துக்கொள்' என்றார்.
 
அதற்குப் பிறகு மாஸ்டர் மாயாவி, சின்னப் பாப்பா, பெரிய பாப்பா தொடர்களில் நடித்தேன். சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரைப் பார்த்த அப்போதைய முதல்வர் ராதிகாவிடம் போன்செய்து, நான் நன்றாக நடிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
 
இதற்குப் பிறகு, அந்தத் தொடரில் ஆறு ஆண்டுகள் நடித்தேன். அதற்குப் பிறகு ஆனந்த பவன், என் பெயர் ரங்கநாயகி, உயிரே உயிரே, வாழ்க்கை, செல்வி என பல தொடர்களில் நடித்தேன்.
 
சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தவுடன், இங்கே இருந்த இயக்குனர்கள் சீரியல்களை கொஞ்சம் குறைத்துக்கொள்ளும்படி சொன்னார்கள். அப்போது சினிமா வாய்ப்புகள் குறைவுதான். இருந்தபோதும் பிறகு சீரியல்களை விட்டுவிட்டு சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன். டப்பிங் வாய்ப்புகளையும் தொடர்ந்தேன்.
 
கே. திரைப்படங்களைப் பொறுத்தவரை உங்களுக்கு நல்ல பெயரை வாங்கித்தந்து, 'பிரேக்' கொடுத்த படமாக எதைச் சொல்வீர்கள்?
 
ப. சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போது டும்..டும்..டும்.. படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்தது பெரிதாக கவனிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ராதா மோகன் இயக்கத்தில் அழகிய தீயே படத்தில் மளிகைக் கடை அண்ணாச்சியாக நடித்த பாத்திரமும் கவனிக்கப்பட்டது.
 
அதற்குப் பிறகு, மொழி, காற்றின் மொழி, திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களிலும் என் பாத்திரம் கவனிக்கப்பட்டது. இந்தப் படம்தான் பிரேக் கொடுத்தது எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நான் நடித்த எல்லாப் பாத்திரங்களையுமே நான் விரும்பியே நடித்தேன்.
 
கே. எங்கள் அண்ணா படத்தில் குடித்துவிட்டு சாலையில் ரகளை செய்பவராக நடித்திருந்தீர்கள். மிகச் சிறியதுதான் என்றாலும் அந்தப் பாத்திரம் மிகவும் கவனிக்கப்பட்டது. இப்போது புத்தம்புது காலை படத்தில் ஒரு சயின்டிஸ்டாக நடித்திருக்கிறீர்கள். இரண்டு பாத்திரங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது. அந்த இடைவெளியை எப்படிக் கடந்தீர்கள்..
 
 
ப. புத்தம்புது காலை படத்திற்காக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என்னை அணுகியபோது, மிக அழகாக அந்தப் பாத்திரத்தை விளக்கினார். நான் அவரிடம் சிலவற்றை ஆலோசித்தேன்.
 
"இப்படி நடக்கலாமா, இப்படி கை சற்று நடுக்கத்தோடு இருக்கலாமா?" என்றெல்லாம் கேட்டேன். அவர் முழு சுதந்திரம் கொடுத்தார். நீங்கள் விரும்பியபடி நடியுங்கள். நான் தேவைப்பட்ட மாதிரி எடுத்துக்கொள்கிறேன் என்றார். அந்தப் படத்தின் குழுவே ஒரு அற்புதமான குழு. அவர்கள் எனக்கு அந்தப் படத்தின் மூலம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தார்கள் என்றுதான் சொல்வேன்.
 
அதேபோல, குடிகாரர்களை நாம் சாலையில் தொடர்ந்து கவனிக்கிறோம். டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் காரை நிறுத்திவிட்டு நான் அவர்களைக் கவனிப்பேன். எனக்கு சின்ன வயதிலிருந்தே மனிதர்களைக் கவனிக்கும் சுபாவம் உண்டு. இப்படி குடிகாரர்களைக் கவனித்துத்தான் அந்தப் பாத்திரத்தைச் செய்தேன்.
 
இயக்குனர் சித்திக் அதை அழகாக காட்சிப்படுத்தினார். அதற்குப் பிறகு என் ட்ராக் கொஞ்சம் மாறியது. அதுவரை காமெடிதான் நிறைய செய்துகொண்டிருந்தேன். இப்போது நிறைய குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறேன்.
 
கே. புத்தம்புது காலை படத்தில் தாத்தா பாத்திரத்தில் நடிக்கும்போது லேசாக கூன் விழுந்தவரைப் போல நீங்கள் நடித்திருந்தீர்கள். அதுபோல ஒவ்வொரு பாத்திரத்திலும் கவனிக்கும்படி சிலவற்றைச் செய்கிறீர்கள். இவையெல்லாம் நீங்களே செய்வதா அல்லது இயக்குனர்கள் சொல்வதைச் செய்கிறீர்களா?
 
ப. இவையெல்லாம் நான் கவனித்தது. என் நண்பன் வீட்டில் ஒரு தாத்தா இருந்தார். அவருக்கு வயதின் காரணமாக, முதுகில் ஒரு சிறிய வலி இருக்கும். அதனால் வலிக்கும் இடத்தில் கையை வைத்துக்கொள்வார்.
 
அது இதமாக இருக்கும். 1986வாக்கில் அவரைப் பார்த்தது. அவருடைய நடையைப் பார்த்துதான் இப்போது புத்தம்புது காலையில் அந்தப் பாத்திரத்தைச் செய்தேன். அதேபோல, முதியவர்கள் முதலில் ஒரு திசையில் சென்றுவிட்டு பிறகு ஞாபகம் வந்தவர்களைப் போலத் திரும்பி வேறு திசையில் செல்வார்கள்.
 
புத்தம்புது காலை படத்தில் அப்படியும் ஒரு காட்சியில் செய்திருப்பேன். இதெல்லாம் முதியவர்களைக் கவனித்ததில் மனதில் பதிந்தது.
 
அதேபோல மொழி படத்தில் ஒரு பேராசிரியர் இருப்பார். எப்போதும் சிந்தனையிலேயே இருப்பார். என்னுடைய கல்லூரியிலும் ஒரு பேராசிரியர் இருந்தார். அவரும் இதேபோலத்தான் சிந்தனையிலேயே இருப்பார்.
 
வணக்கம் சொன்னாலும் பதிலுக்கு ஏதும் சொல்லமாட்டார். நான் மற்றொரு பேராசிரியரிடம் இவரைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார், அந்தப் பேராசிரியருக்கு காதல் தோல்வி. அதற்குப் பிறகு திருமணமும் செய்துகொள்ளவில்லை.
 
அதனால்தான் அப்படியே இருக்கிறார் என்றார். அதை அப்படியே மாற்றி, மகனுடைய இழப்பைத் தாங்க முடியாத பேராசிரியர் அதே சிந்தனையிலேயே இருப்பதைப் போல நடித்தேன்.
 
இயக்குனர்கள் முழு சுதந்திரம் கொடுத்தால் இதுபோல செய்ய முடியும்.
 
கே. உங்களுடைய இத்தனை ஆண்டுப் பயணத்தில் இந்த இயக்குனருடன், இந்த நடிகருடன் நடிக்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறதா?
 
ப. அப்படி ஏதும் இல்லை. என் பாத்திரம் நன்றாக இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன். புதிய இயக்குநரா, வளர்ந்த இயக்குநரா, பெரிய இயக்குநரா என்று பார்ப்பதில்லை.
 
அப்படிப் பார்த்தால், எட்டுத் தோட்டாக்கள் ஸ்ரீ கணேஷுக்கு அது முதல் படம்தானே. ஒரு பாத்திரம் நன்றாக வருமா, வராதா என்று நம்மால் கணிக்க முடியாவிட்டால் சிறந்த நடிகராக வர முடியாது.
 
இயக்குனர் கதை சொல்லும்போதே உன்னிப்பாக கவனிக்க வேண்டும். எப்படிச் செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். இயக்குனரும் நானும் கலந்தாலோசித்து ஒரு பாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவுசெய்வோம்.