புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (16:33 IST)

கே.டி. ராகவன் வீடியோ - அண்ணாமலை அடுத்து என்ன செய்யப்போகிறார்?

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கே.டி. ராகவன் காணொளியொன்றில் ஆபாசமாக செயல்படுவது போன்ற காணொளி வெளியான விவகாரத்தில் கட்சி அளவில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விளக்கியிருக்கிறார், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை.

தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அண்ணாமலை முதல் முறையாக இன்று புதுச்சேரி வந்தார்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் நிர்வாகிகளை அவர் சந்தித்துப் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அனைத்து மாநில பாஜகவுக்கு உத்வேகம் தரக்கூடிய பாஜகவாக புதுச்சேரி பாஜக மாறியிருப்பதாக தெரிவித்தார்.

"புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் அற்புதமான, வித்தியாசமான ஆட்சியை புதுச்சேரி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த முதல்வரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றால் மத்திய அரசின் மீதும், ஆளுநர் மீதும் பழிபோடுவதை பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது ஆரோக்கியமான முறையில் ஓர் ஆட்சி நடக்கிறது. இதற்கு பாஜக கூட்டணியில் முக்கிய காரணமாகும். இதே உத்வேகத்தில் தமிழகத்திலும் பாஜகவை வளர்க்க அரும்பாடு படுவோம்."

"புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வராது, மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், தாமரை மலராது என்று கூறியதை இங்குள்ள தலைவர்கள் முறியடித்துள்ளனர். பாஜகவை நம்பியும், அதன் தலைவர்களை நம்பியும் வாக்களித்து, அதனுடைய பலனை இங்குள்ள மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக பாஜகவுக்கு ஓர் உத்வேகத்தை கொடுத்திருக்கிறார்கள். உழைப்புக்கு மக்கள் வெகுமதி கொடுப்பார்கள் என்று புதுச்சேரி பாஜகவை பார்த்து கற்றுக் கொண்டுள்ளோம். வருகின்ற காலம் தமிழகத்தில் கூட அடி மேல் அடி எடுத்து வைத்து நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம்," என்றார்‌அண்ணாமலை.

"தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகளைத் திறக்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால், அசாதாரணமான சூழ்நிலையில் குழந்தைகள் இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளோம். இதனால் எல்லா குழந்தைகளுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே பள்ளி திறப்பை பாஜக வரவேற்கிறது," என்றார் அண்ணாமலை.

விநாயகர் சதுர்த்திக்கு தனி மனிதனாக விநாயகரை வழிபடலாம், சிலையை கரைத்துக் கொள்ளலாம். ஆனால், கூட்டமாக செல்ல அனுமதியில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே மாதிரிதான் இருந்தது. விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களிடம் விட்டு விடுங்கள். அவர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் விழாவை நடத்திக் காட்டுவார்கள் என்று அண்ணாமலை கூறினார்.

"டாஸ்மாக்கை திறந்து அதிகமான மக்களை விடுகிறோம். இந்த நிலையில் எதற்காக விநாயகர் சதுர்த்தி பேரணியைத் தடை செய்ய வேண்டும். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது," என‌ அண்ணாமலை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கட்சி தலைவரின் பெயரில் ஒரு வீடியோ வெளி வந்துள்ளது. அதற்கு ஒரு குழு போட்டுள்ளோம். அந்த குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும்,"

மதன் ரவிச்சந்திரன் பெயரை குறிப்பிடாமல் பேசிய அண்ணாமலை, "அந்த பத்திரிகையாளர் எதற்கு என்னை சந்தித்தார். அப்போது நான் என்ன பேசினேன் என்று நான் அறிக்கையில் சொன்னதற்கும், அவர் வெளியிட்ட வீடியோவுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது. அவர் முறைப்படி அந்த வீடியோ டேப்பை என்னிடம் கொடுத்திருந்தால் கட்சி சார்பாக நடவடிக்கை எடுத்திருப்போம்.

"அவர் அந்த வீடியோவை கொடுக்க ஆர்வமில்லாமல் வெளியிட்டுள்ளார். நான் வெளியிட்ட அறிக்கைக்கும், பத்திரிகையாளர் வீடியோவில் நான் பேசியுள்ளதற்கும் எந்த மாறுபாடும் இருக்காது. மேலும், பத்திரிகையாளர்களின் முதல் வீடியோவில் கட்சியை சார்ந்தும், நிர்வாகிகளை சார்ந்தும், பெண் நிர்வாகிகள் சார்ந்தும் சில விஷயங்கள் பேசியுள்ளார். அது சம்பந்தமாக குழு அமைத்து, அந்தக் குழுவுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளோம். அக்குழு நடவடிக்கை எடுக்கும்," என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.