புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (20:24 IST)

ஆச்சி மசாலா: கேரள அரசு தடை விதித்தது உண்மையா?

கேரள மாநிலத்தின் திருச்சூரில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் தூளில் ஒரு பிரிவில் (batch) நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பூச்சிக்கொல்லிகள் இருந்ததால், அந்த பிரிவின் விற்பனைக்கு திருச்சூரில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சூர் உணவு பாதுகாப்பு துறையின் உதவி ஆணையர் ஜெனார்தன் தெரிவித்துள்ளார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இதனை பெங்களூருவிலுள்ள மத்திய உணவு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டியிருக்கும். அந்த அலுவலக ஆய்வு அறிக்கைக்கு பின்னர்தான், அரசு இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

ஆனால், ஆச்சி மசாலா பொருட்கள் மீது தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும், காழ்புணர்ச்சியால் இந்த விடயம் பெரிதாக்கப்பட்டுள்ளது என்றும் ஆச்சி மசாலா நிறுவனத்தின் உரிமையாளர் பத்மசிங் ஐசக் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் விவாதம்

சில தினங்களுக்கு முன்பு, ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடிக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சமூக ஊடகங்களிலும் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது.

ஆனால், இது ஒரு தமிழருக்கு எதிரான தவறான பரப்புரை என்றும் கருத்துகள் வெளியாகின.
கேரளாவில் ஆச்சி மசாலாவுக்கு தடைவிதிக்கப்பட்டதா என்று ஆச்சி மசாலா நிறுவனத்தின் உரிமையாளர் பத்மசிங் ஐசக்கிடம் தொடர்பு கொண்டு கேட்டது பிபிசி தமிழ்.

ஆச்சி மசாலாவுக்கு தடையில்லை

ஆச்சி மசாலா தடைசெய்யப்படவில்லை என்றும், ஏதோவொரு காழ்புணர்ச்சியால் இதனை ஊதி பெரிதாக்கி வாட்ஸ்அப்பில் செய்திகள் பரவி வருவதாகவும் ஐசக் தெரிவித்தார்.

பொதுவாக உணவு பாதுகாப்பு துறை (FSI) எல்லா இடங்களிலும் சாம்பிள் (மாதிரிகள்) எடுப்பார்கள். இதுபோல 20 நிறுவனங்களின் மாதிரிகளை அவர்கள் எடுத்துள்ளார்கள். இந்த நிறுவனம் மீது இவ்வாறு முடிவு வந்துள்ளதை காட்டுவதற்கான கடிதம் அனுப்பப்படவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

"எங்களை பொறுத்தவரை எங்களுடைய பொருட்கள் உண்மையானவை. கேரளாவில் இது தடை செய்யப்படவில்லை" என்று ஐசக் தெரிவித்தார்.

திருச்சூர் அதிகாரிகளே தடை அறிவித்திருக்கிறார்களே, அப்படியானால் ஏதாவது குறைபாடு இருக்குதானே என்று நாம் கேட்டதற்கு, திருச்சூரில் அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை என்று ஐசக் மறுத்தார். சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட பொய்ச் செய்திகளே தவிர வேறில்லை என்று அவர் கூறினார்.

மேலும், ஒரு சிறந்த விற்பனை பொருளை கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதனையே செய்து வருகிறோம். ஒரு சிலருக்கு எங்களது வளர்ச்சி பிடிக்காமல் இருக்கலாம். எங்களின் வளர்ச்சி ஒரு சிலருக்கு பாதிப்பாக இருந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

இந்த செய்தியால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி கேட்டபோது, இந்த மாதிரி செய்திகளை அறியவரும்போது, 20 ஆண்டுகளாக தாங்கள் பயன்படுத்தி வருகின்ற பொருளில் இப்படியா என்று மனதளவில் மக்கள் அதிருப்தி ஆகிவிடுகிறார்கள். ஆனால், எமது வாடிக்கையாளர்களுக்கு எங்கள் பொருளின் தரம் பற்றி நன்றாக தெரியும் என்பதால் விற்பனை ரீதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

எங்கள் பொருட்கள் பேசும்

இந்த பிரசாரத்திற்கு பதில் நடவடிக்கையாக தங்களின் பொருட்கள் தடைசெய்யப்படவில்லை என்று செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டோம். கேரளாவில் ஓணம் பண்டிகை நடைபெறுவதால், அங்குள்ள உண்மையான நிலை இப்போது தெரியவில்லை. இந்த பண்டிகைக்கு பின்னர்தான் அனைவரையும் பார்க்க முடியும். எனவே, இந்த செய்தித்தாள் ஏதாவது தவறான செய்தியை வெளியிட்டிருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்போம். சட்டப்படி நோட்டிஸ் அனுப்புவோம் என்று ஐசக் கூறினார்.

மக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும் முயற்சி பற்றி கேட்டபோது, “எங்கள் பொருட்கள் பேசும். நாங்கள் தன்னிகரான பொருளை விற்பனை செய்கிறோம். எனவே, அந்தப் பொருட்களே பேசும்” என்றும், “உலக அளவிலுள்ள தங்களின் வாடிக்கையாளருக்கு ஆச்சி மசாலாவின் தரம் பற்றி நன்றாகவே தெரியும்” என்றும் ஐசக் உறுதிப்பட தெரிவித்தார்

திரிச்சூரில் அதிகாரிகள் யாரும் ஆச்சி மசாலா தடை பற்றி அறிவிக்கவில்லை என்று அந்த நிறுவனத்தின உரிமையாளரே தெரிவித்த நிலையில், திரிச்சூரிலுள்ள உணவு பாதுகாப்பு துறையை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டது.

ஒரு பிரிவுக்கு திரிச்சூரில் தற்காலிக தடை

ஆச்சி மசாலா நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட மிளகாய் தூள் பாக்கெட்டை பிரதேச ஆய்வகத்தில் ஆய்வு செய்தபோது சில பூச்சிக்கொல்லிகள் (pesticides) இருப்பது கண்டறியப்பட்டது. சாதாரணமாக அனுமதிக்கப்பட்ட 0.01மில்லிகிராமைவிட அதிகமாக இந்த பூச்சிக்கொல்லிகள் இருந்ததால், இந்த பாக்கெட் விற்பனை திரிச்சூரில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று திருச்சூர் உதவி ஆணையாளர் ஜெனார்தன் தெரிவித்தார்.

எங்கள் முதல் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டதால், மக்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் திரிச்சூர் உதவி ஆணையாளர் தற்காலிக தடை விதித்துள்ளார்.

ஆனால், அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த பொருளை பெங்களூருவிலுள்ள மத்திய உணவு ஆய்வகத்திற்கு இந்த நிறுவனம் அனுப்ப வேண்டியிருக்கும். அந்த ஆய்வு அறிக்கையின்படிதான், கேரள மாநில அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

நிறுவனத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணவில்லை. ஆனால், இந்த ஆய்வு முடிவு உண்மையானது. அந்த முடிவு எங்களிடமே உள்ளது என்றும் ஜெனார்தன் கூறினார்.