"மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை," என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பிரான்ஸில் இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கு நிலவுவதாக கூறி, அந்த நாட்டிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் பாகிஸ்தான், வங்கதேசம், லெபனான் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரான்ஸுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.
இதில் பங்கேற்றவர்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்குமாறு வலியுறுத்தியதுடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்குக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், கருத்துச் சுதந்திரத்துக்கும் ஒரு எல்லை உண்டு என்று கூறியுள்ள அவர், அது மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
"சர்வதேச அளவில் இந்த பிரச்சனை எழுப்பப்படும்"
"இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் முகமது நபிகள் மீது கொண்டுள்ள உணர்வு குறித்து மேற்குலக நாடுகளை சேர்ந்த மக்களுக்கு எவ்வித புரிதலும் இல்லை" என்று மீலாதுன் நபியை ஒட்டி பாகிஸ்தானில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ள இம்ரான் கான், உலகம் முழுவதும் நிலவி வரும் இஸ்லாமியவாத எதிர்ப்பு மனநிலை குறித்து பேசுவது அவர்களது கடமை என்று கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் இந்த பிரச்சனையை தானே சர்வதேச அளவில் எழுப்பப்போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனை குறித்து பேசியபோது, "மேற்குலக நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த பிரச்சனை குறித்து அனைத்து முஸ்லிம் நாடுகளும் கலந்து பேசி முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று நான் கோரியுள்ளேன்" என்றும் இம்ரான் கான் கூறினார்.
"இஸ்லாமியவாத எதிர்ப்பு மனநிலையானது, இஸ்லாத்தை பின்பற்றும் சிறுபான்மை மக்கள் தொகையை கொண்ட நாடுகளில் வாழும் முஸ்லிம்களை பாதிக்கிறது." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் பிரான்ஸுக்கு எதிரான போராட்டங்கள்
இஸ்லாம் குறித்த மக்ரோங்கின் சமீபத்திய கருத்துகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் போராட்டங்களை தூண்டியுள்ளன.
அதாவது, இஸ்லாமிய மதம் "நெருக்கடியில்" இருப்பதாக கூறிய அவர், பிரான்ஸில் முகமது நபிகளின் கேலிச்சித்திரங்களை வெளியிட பதிப்பாளர்களுக்கு உள்ள உரிமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருந்தார்.
முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக பிரான்ஸில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஆசிரியர் ஒருவர் தலை வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், "இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை பறிக்க நினைப்பதால் ஆசிரியர் சாமுவேல் பேட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது" என்று எதிர்வினையாற்றியிருந்தார். முகமது நபி அல்லது அல்லாஹ்வின் (கடவுள்) சித்தரிப்புகள் அல்லது உருவங்களை இஸ்லாமிய பாரம்பரியம் வெளிப்படையாக தடைசெய்யும் நிலையில், அதை இழிவுப்படுத்தும் வகையில் மக்ரோங்கின் கருத்துகள் இருப்பதாக முஸ்லிம்கள் கருதினர்.
இதையடுத்து, பிரான்ஸுக்கு எதிரான போராட்டங்கள் கடந்த பல நாட்களாக முஸ்லிம் நாடுகள் பலவற்றிலும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம், பிரான்ஸின் நீஸ் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்தனர். நீஸ் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையினரால் சுடப்படும் முன் "அல்லாஹு அக்பர்" எனக் கத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் ஒரு "இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்" என பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகளின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தை நோக்கி அணிவகுத்து வந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். சில போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் தடுப்புகளை உடைக்க முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும், ஜெருசலேமின் ஓல்ட் சிட்டியில் உள்ள இஸ்லாத்தின் மூன்றாவது புனித தலமான அல்-அக்ஸா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு பிரான்ஸில் முகமது நபிகளின் கேலிச்சித்திரம் பிரசுரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.