வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (14:42 IST)

உடல்நலம் இல்லாமல் போராடும் தம்பி - அனைத்தையும் இழந்த அண்ணனின் 13 ஆண்டு பாசப் போராட்டம்

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாறசாலா எனும் பகுதியில் வாழ்ந்து வரும் விபின், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக்கீழே உடல்பகுதி முழுவதும் செயலிழந்துபோன தனது தம்பியை கடந்த 13 வருடங்களாக யாருடைய உதவியுமின்றி வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகிறார். தம்பிக்காக தனது சொத்துகள் அனைத்தையும் விற்றதோடு மனைவி மற்றும் பிள்ளைகளையும் பிரிந்து வாழும் விபினின் பாசப் போராட்டத்தை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

பாறசாலாவை அடுத்த கொடுவிளையில் உள்ள விபினின் வீடு அத்தனை ரம்மியமாக இருக்கிறது. வீட்டைச் சுற்றிலும் பேரமைதி நிரம்பியிருக்கிறது. அந்த அமைதியை ரசித்தபடியே வீட்டிற்கு உள்ளே சென்றால், அடுத்த கணம் நாம் மருத்துவமனைக்குள் நுழைந்துவிட்டதைப்போன்ற உணர்வு. வீட்டினுள் உள்ள ஓர் அறையை ஐசியு வைப்போலவே மாற்றி வைத்துள்ளார்.

அறையில் வெண்ட்டிலேட்டர் உதவியோடு சுவாசித்துக்கொண்டிருந்த லிஜோவிற்கு பல் துலக்கிவிட்டுக்கொண்டிருந்தவர் சில நிமிடங்களுக்குப் பின் நம்மிடம் பேசத் தொடங்கினார்.

"இவன்தான் என் தம்பி லிஜோ. அவனுக்கு 19 வயசு இருக்கும்போது திடீரென காய்ச்சல் வந்துடுச்சு. உடனே அவனை பாறசாலையில இருக்கிற கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனோம். அங்கே செக் பண்ணி பாத்துட்டு திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் கொண்டு போக சொன்னாங்க. அங்க கொண்டு போகும்போதே கழுத்து வரைக்கும் உடம்பு தளர்ந்துடுச்சு.

அதுக்கப்பறம்தான் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போக முடிவெடுத்தோம். அங்கே பிளாஸ்மா எக்சேஞ்ச் பண்ணினா குணப்படுத்த வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. ஆனாலும், தம்பியோட உடல்நிலையில முன்னேற்றமே இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா அங்கேயே ஐசியு-ல வெச்சிருந்தோம்.

அப்போதான் டாக்டர் எங்ககிட்ட, "இவரோட உடல்நிலையில இம்ப்ரோவ்மெண்ட்டே இல்லை. இந்த சூழல் நிச்சயம் இவரை மீட்டெடுக்காது. நீங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரியிலயோ வீட்டுலயோ வெச்சு பார்க்கிறது ரொம்ப நல்லது. இங்க இருந்தா அவருக்கு மனரீதியா நிறைய பாதிப்பு வரும்" னு அட்வைஸ் பண்ணினாங்க. அதனால, வீட்டுக்குப் பக்கத்துல இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போனோம். மூன்றரை வருஷம் அங்கேயே தம்பிக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்க. அப்போதான் அவனோட மருத்துவ செலவுக்காக என் வஸ்த்துக்கள் (சொத்துகள்) என் தம்பியோட வஸ்த்துக்கள், நாங்க வாழ்ந்த வீடுன்னு எல்லாத்தையும் விக்கிற சூழல் வந்துடுச்சு. அதுக்கு மேல தம்பிய ஆஸ்பத்திரியில வெச்சு பார்க்க முடியாத சூழல்லதான் நாங்க வீட்டையே ஐசியுவா மாத்துனோம்" என்கிறார் விபின்.

வீட்டிலேயே தனது தம்பியை வைத்து பராமரிக்க வேண்டிய நிலை வந்தபோது விபின் நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். அவரின் மூத்த அண்ணன் மனைவியை அழைத்துக்கொண்டு வேறொரு வீட்டிற்கு குடிபோயுள்ளார். திருமணம் முடியாத இரண்டு சகோதரிகள் மனதளவில் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். தம்பிக்காக சொத்துகள் அனைத்தையும் விற்று கடன் வாங்க ஆரம்பித்ததால் அவர் மனைவியும் மனநலம் பாதிக்கப்பட்டுவிட கலங்கிப்போய் நின்றவர் தம்பியை எப்படியாவது குணப்படுத்திவிட முடியாதா என்ற முயற்சியில் உறவுகள் அனைத்தையும் இழந்த பின்பும் தனியாக லிஜோவை கவனித்து வருகிறார்.

"அம்மா இறந்ததுக்குப் பிறகு நான் யார் மேல எல்லாம் நம்பிக்கை வெச்சிருந்தேனோ அவங்க எல்லாருமே என்னைய விட்டுட்டுப் போயிட்டாங்க. ஆனாலும், எனக்கு என் தம்பிய அப்படியே விட மனசு வரலை. அவனை எந்த அளவுக்கு நான் கேர் பண்ணிக்கிறேனோ, அந்த அளவுக்கு அவனால நாம நோயாளி்ங்கிற மனநிலையில இருந்து வெளிய வர முடிஞ்சது. படுத்த படுக்கையா இருந்தாலும் மனதளவுல உற்சாகமா இருக்கிறான்.

உண்மைய சொல்லப்போனா அவன் இயல்பாவே ரொம்ப தைரியமான பையன். டிப்ளமோ முடிச்சிட்டு பிடெக் படிக்கலாம்னு முடிவெடுத்திருந்த நேரத்துலதான் காய்ச்சல் வந்து அவனை முடக்கிப் போட்டுடுச்சு. அவன் ஒரு ஸ்போர்ட்ஸ் ப்ளேயர். டேபிள் டென்னிஸ்ல ஸ்டேட் லெவல்ல விளையாடியிருக்கான். படிப்பு, விளையாட்டுன்னு எப்போதும் துறுதுறுன்னு இருந்தவன்தான் இப்போ 13 வருஷமா படுத்த படுக்கையா கிடக்குறான்.

ஒரு எமர்ஜென்சி வார்டுல இருக்கிற நிலைதான் அவனோடது. திடீர் திடீர்னு இன்வெர்ட்டர், வெண்ட்டிலேட்டர்லாம் பிரச்னைக்குள்ளாகிடும். அந்த நேரங்கள்ல அவனை கூடுதலா பக்கத்துல இருந்து கவனிச்சுக்கனும். நாம எவ்வளவுதான் கவனிச்சுக்கிட்டாலும் அவனோட வேதனைய மட்டும் யாராலயும் உணர முடியாது.

தம்பி ஒருபக்கம் கஷ்டப்பட்டுட்டு இருக்கிற நேரத்துல என்னோட சகோதரிகள் வேற மனநலம் பாதிக்கப்பட்டுட்டாங்க. பெரியவங்களை ஹோம் கேர்ல விட்டுருக்கேன்.

சின்னவங்கள என்கூட வீட்டுலயே வெச்சு பாத்துக்கறேன். என் மனைவிக்கும் இதே பிரச்னை வந்துடுச்சு. அதனால, அவங்க அம்மா வீட்டுல இருக்காங்க. இடைப்பட்ட காலத்துல எனக்கும் லிவர் பிரச்னை வந்துடுச்சு. மருத்துவ செலவு அதிகரிச்சது. சாப்பாட்டுக்கே வழி இல்லாத சூழல்லதான் நாம தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தேன். அந்த நேரத்துல நாம போயிட்டா தம்பிய யாரு பாத்துப்பான்னு நினைச்சு மனச மாத்திக்கிட்டேன்" என்கிறார் கண்ணீரோடு.

தம்பியின் மருத்துவ செலவுகளுக்கே கடன் வாங்கி வந்த சூழலில் தனது இரண்டு பிள்ளைகளையும் விபினால் படிக்க வைக்க முடியவில்லை. சொந்தங்களும் கடன் கொடுப்பதற்கு பயந்து அவரை விட்டு விலகிவிட்டனர். இந்நிலையில்தான் லிஜோவுக்கு ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு தகவல் கிடைக்க பிறகு அவர்கள் மூலம் விபினுக்கு உதவி கிடைத்துள்ளது.

"ஆரம்பத்துல நாங்க வீட்டு கஷ்டம் வெளியில தெரியாமதான் வாழ்க்கைய நடத்திட்டு இருந்தோம். ஒரு கட்டத்துக்கு மேல அக்கம் பக்கத்துல உள்ளவங்களுக்கு விஷயம் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. லிஜோவுக்கு சிகிச்சை கொடுத்த டாக்டருங்களும் வந்து பார்த்துட்டு 13 வருஷமா எப்படி இவரால உயிர் வாழ முடியுதுன்னு ஆச்சரியப்பட்டாங்க.

அதுக்குப் பிறகுதான் அவங்க மூலமா ஊர்த்தலைவர், திருவனந்தபுரம் கலெக்டர், எம்.எல்.ஏ, கட்சிக்காரங்கன்னு வந்து பாத்தாங்க. முதல்ல நாங்க மூணு வேளையும் சாப்பிடுறதுக்கு வழி பண்ணினாங்க. பிள்ளைகள அரசுப்பள்ளியில சேர்த்து விட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா எங்களுக்கு உதவி கிடைக்க ஆரம்பிச்சது. இப்போ அரசாங்கத்துல இருந்து வீடு கட்டித்தர்றதா சொல்லியிருக்காங்க. சொந்தக்காரங்க எல்லாரும் எங்க இவன் நம்மகிட்ட கடன் கேட்டுருவானோன்னு பயந்து ஓடி ஒளிஞ்சாங்க.

ஆனா, அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தாங்க. அந்த நம்பிக்கையிலதான் சரி நாம இன்னும் கொஞ்ச காலம் வாழலாம்னு முடிவெடுத்துருக்கோம்" என்றவரிடம், "இவ்வளவு வலிகளை சுமந்துக்கிட்டு இருக்கீங்க. சகோதரிகள், மனைவி, பிள்ளைகள்னு எல்லாரையும் பிரிந்த பிறகும்கூட ஏன் தம்பி மேல இவ்வளவு பாசம் உங்களுக்கு. எப்போதாவது தம்பியை விட்டுட்டுப் போயிடலாமான்னு யோசிச்சிருக்கீங்களா?" என்றோம்.

"என்ன சார், இப்புடி கேட்டுட்டீங்க. அவன் என் தம்பிங்க. என் உடம்புல ஓடுற ரத்தம்தானே அவனோட உடம்புலயும் ஓடுது. அப்பா, அம்மாவுக்கு நாங்க 5 பிள்ளைங்க. எனக்கு 11 வயசா இருக்கும்போது என் அப்பா எங்களை விட்டுட்டுப் போயி வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அம்மாதான் எங்க 5 பேரையும் கஷ்டப்பட்டு வளத்தாங்க. அன்னிக்கு எங்கள வளர்க்க முடியலன்னு சொல்லி அம்மாவும் விட்டுட்டுப் போயிருந்தா எங்க நிலைமை என்ன ஆகியிருக்கும். அம்மா அப்போ பண்ணினதை நான் இப்போ பண்ணுறேன். அதுமட்டுமில்லாம, என் தம்பி என்மேல முழு நம்பிக்கை வெச்சிருக்கான்.

அண்ணன் கூட இருக்கிற வரை நமக்கு பிரச்னை இல்லன்னு முழுசா நம்புறான். அந்த நம்பிக்கைய நான் கடைசி வரை காப்பாத்துவேன். நான் இருக்கிற வரை என் தம்பியும் இந்த உலகத்துல இருப்பான். அவனோட மூச்சுக்காத்து என்மேல பட்டுக்கிட்டே இருக்கும்" என பேசிக்கொண்டிருக்கும்போதே தன் தம்பியின் நெற்றியில் முத்தமிடுகிறார்.