1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (22:15 IST)

கொரோனா வைரஸ்: மலேசியாவில் அரசு உத்தரவை மீறிய 7,500 பேர் கைது - இன்று அங்கு நடந்தவை என்ன?

மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை மீறிய குற்றத்தின் பேரில் சுமார் 7500 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்மேலும் 392 பேருக்கு ஆயிரம் மலேசிய ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ.17,500) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆணையை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீண்டும் எச்சரித்துள்ளார். மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையை மீறுபவர்கள் 1988ஆம் ஆண்டு தொற்றுநோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் 24ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படுகிறார்கள். இவர்களுக்கு 2 முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க சட்டம் வழிவகுக்கிறது. அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாக 1,094 பேர் கைதாகியுள்ளனர் என்றும், வியாழக்கிழமையன்று 666 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.


"பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் நேற்று 775 இடங்களில் சாலைத் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நடவடிக்கையின்போது 5 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

"97 விழுக்காடு மக்கள் பொது நடமாட்டக் கட்டுப்பாடுட ஆணையை முறையாகப் பின்பற்றுகின்றனர். இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு 24 நாட்களாகின்றன. இதுவரை 7,479 பேர் அரசு ஆணையை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். நாள்தோறும் சராசரியாக 311 பேர் கைதாகியுள்ளனர்," என்றார் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி.

இந்நிலையில் நாடு முழுவதும் சாலைத் தடுப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்த்தப்படும் என்றும், விதிமுறைகளை மீறுவோரைக் கைது செய்வதா அல்லது வெறும் அபராதம் மட்டும் விதிப்பதா என்பதைப் போலிசார் முடிவு செய்வர் என்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,530 ஆனது

இதற்கிடையே மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,530 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் பலியானதை அடுத்து நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆனது.

இன்று ஒரே நாளில் புதிதாக 184 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்நோயிலிருந்து முழுமயாக குணமடைந்த 175 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம் மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,995 ஆக உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 44 விழுக்காடாகும்.

மலேசியாவில் கோவிட் 19 நோயிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சிகையலங்கார கடைகளைத் திறக்க எதிர்ப்பு

இதற்கிடையே பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான சில விதிமுறைகளை மலேசிய அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி சிகை அலங்காரக் கடைகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அறிவிப்பு வெளியான உடனேயே மலேசிய சுகாதார அமைச்சு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. சிகையலங்காரக் கடைகளில் சிகையலங்காரம் செய்பவர் மற்றும் வாடிக்கையாளர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவும் ஆபத்துள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் நல்ல பலன்கள் அளித்துவரும் நிலையில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் விதிமுறைகளைத் தளர்த்துவது சரியல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இவ்விஷயத்தில் பொது மக்களின் கருத்தை அறிந்து இறுதி முடிவெடுக்கப்படும் என அரசுத்தரப்பில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் மலேசிய சிகை அலங்கார சங்கம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சங்க உறுப்பினர்களில் 90 விழுக்காட்டினர் மீண்டும் கடைகளைத் திறக்க ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டான இந்த வேளையில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும் மக்களின் உயிரும்தான் முக்கியம் என அச்சங்கம் கூறியுள்ளது.