புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Modified: ஞாயிறு, 16 ஜனவரி 2022 (11:48 IST)

பன்றியின் இதயத்தை பெற்ற நபரின் சர்ச்சைக்குரிய கடந்த காலம்!

சமீபத்தில், உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் பெற்றார். அவர் ஒரு நபரை ஏழு முறை கத்தியால் குத்தித் தாக்கிய குற்றவாளி என்று, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
57 வயதான டேவிட் பென்னட், 1988ஆம் ஆண்டு, எட்வர்ட் ஷூமேக்கர் என்பவரை கத்தியால் குத்திய வழக்கில் குற்றவாளி என்று ஷூமேக்கரின் சகோதரி ரேடியோ 4-இன் டுடே ஷோ என்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவத்திற்கு பிறகு, அதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பின், தமது சகோதரர் 2007ஆம் ஆண்டு இறந்தார் என்று லெஸ்லி ஷூமேக்கர் டவுனி கூறியுள்ளார்.
 
மருத்துவ சாதனையான இந்த அறுவை சிகிச்சைக்கு பென்னட் தகுதியற்றவர் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், ஒருவரது குற்றங்களின் பின்னணி, அவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்படுவதற்கு ஒருபோதும் காரணமாக இருக்க முடியாது என்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட குழு கூறியுள்ளது.
 
இந்த தாக்குதல் சம்பவம் 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. பென்னட்டின் மனைவி 22 வயதான ஷூமேக்கரின் மடியில் அமர்ந்ததே இதற்கு காரணம் என்று டவுனி கூறுகிறார்.
 
இதனால் பொறாமையும் ஆத்திரமும் அடைந்து, ஷூமேக்கரின் முதுகில் பலமுறை பென்னட் குத்தினார்.
 
தாக்குதலில் ஈடுபட்டது மற்றும், ஆயுதத்தை மறைத்து வைத்திருந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
பன்றியின் இதயத்தை பென்னட் பெறுவது குறித்து யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும், தனது மகள் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய போதுதான் இதுகுறித்து தெரிந்துக்கொண்டதாகவும் டவுனி கூறினார்.
 
"'அம்மா, எட் மாமாவைக் குத்தியது இவர்தான்", என்று எனது இரண்டாவது மகள் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள். பின்,அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செய்தியைப் படித்துக் கோபமடைந்தேன், "என்று அவர் கூறினார்.
 
பால்டிமோர் நகரில், ஏழு மணிநேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, பென்னட் குணமடைந்து வருகிறார்.
 
பென்னட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாக இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை கருதப்பட்டது. இருப்பினும் அவர் எவ்வளவு காலம் உயிர் பிழைத்து இருப்பார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
 
ஆனால், அவர் இதயம் பெறுவதற்கு தகுதியானவர் என்று தான் நம்பவில்லை என்று டவுனி கூறுகிறார்.
 
"அவர்கள் பென்னட்டை ஒரு ஹீரோவாகவும், முன்னோடியாகவும் சித்தரிக்கின்றனர். ஆனால் அவர் அப்படி ஒன்றும் இல்லை," என்று அவர் கூறுகிறார்.
 
"அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்களே அனைத்து பாராட்டுகளும் பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்; பென்னட் அல்ல", என்கிறார்.
 
இந்த தாக்குதலின் விளைவாக ஷூமேக்கர் சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையைக் கழித்தார். பின், கடந்த 2005ஆம் ஆண்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து 2007இல் இறந்தார்.
 
"எனது சகோதரர் 19 ஆண்டுகள் அவதிப்பட்டார். அதன் விளைவாக எனது முழு குடும்பமும் பாதிக்கப்பட்டது" என்று டவுனி கூறினார்.
 
ஆனால், கடந்த கால குற்றங்கள் நோயாளிகளை இத்தகைய சிகிச்சைகள் பெறுவதற்கு தகுதியற்றவர்களாக மாற்றுவது இல்லை என்று பென்னட்டின் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
"ஒவ்வொரு நோயாளிக்கும், அவர்களின் மருத்துவத் தேவைகளின் அடிப்படையில், உயிர்காக்கும் சிகிச்சையை வழங்குவதே எந்தவொரு மருத்துவமனை அல்லது சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் கடமையாகும்", என்று மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளனர்.