வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (12:57 IST)

காலில் ரத்தம் சொட்டச் சொட்ட சாதனை படைத்த மெஸ்ஸி - ஆர்ப்பரித்த அர்ஜென்டினா ரசிகர்கள்

அர்ஜென்டினாவின் தலைநகரமான பியூனஸ் ஐரிஸ் நகரத்தின் 'எல் மானுமெண்டல்' மைதானம் முழுவதும் நேற்று இரவு ஒரே ஒரு பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தது.

மைதானத்தில் கூடியிருந்த 80 ஆயிரம் பேரின் வாயிலிருந்தும் வந்த அந்த ஒற்றைச் சொல் 'மெஸ்ஸி'.

கால்பந்து உலகக்கோப்பை அர்ஜெண்டினாவுக்கு பெற்றுத் தந்த அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி, கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டிக்குஜ பிறகு மீண்டும் ஒருமுறை அந்த அணிக்காக நேற்று களமிறங்கினார்.

அர்ஜெண்டினா vs பனாமா

கத்தாரில் நடந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் வென்று, தாயகம் திரும்பிய மெஸ்ஸி மற்றும் அவரது அணியினருக்கு தலைநகர் பியூனஸ் ஐரிஸில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு நடுவே திறந்த பேருந்தில் கோப்பையுடன் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி வீரர்கள் வலம் வரும்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், மெஸ்ஸி உட்பட அனைத்து வீரர்களும் ஹெலிகாப்டர் உதவியுடன் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.

மெஸ்ஸியால் உலகக்கோப்பையை அர்ஜென்டினா மக்கள் மத்தியில் கொண்டு சென்று கொண்டாட முடியாமல் போனது. இந்தக் குறையை நீக்கும் வகையில் அமைந்தது, நேற்றைய அர்ஜெண்டினா, பனாமா அணிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி.

இரு நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடத்த திட்டமிடப்பட்டு, அர்ஜென்டினாவின் தலைநகரத்தில் இருக்கும் மிகப்பெரிய மைதானமான எல் மானுமெண்டல் மைதானத்தில் இந்தப் போட்டி நடந்தது.

உலகக்கோப்பையை வென்ற பிறகு 'சாம்பியன்' என்ற அந்தஸ்துடன் அர்ஜென்டினா அணி முதல்முறையாக நேற்றைய போட்டியில் களம் இறங்கியது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் 'சாம்பியன்ஸ்' என்று பொறிக்கப்பட்ட அர்ஜென்டினா அணியின் பிரமாண்ட ஜெர்ஸி மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

உலககோப்பையை மைதானத்திற்கு கொண்டு வந்த அந்தத் தருணத்தில், அர்ஜென்டினா ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி கொண்டாடித் தீர்த்தனர்.

ஆட்டத்திற்கு முன்பு மைதானத்தில் அர்ஜென்டினாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியின் வீரர்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டனர். குறிப்பாக பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனி, கண்ணீர் மல்க தேசிய கீதத்தைப் பாடினார்.

'ரத்தக் காயம்'

நட்பு ரீதியான ஆட்டம் என்றாலும், சர்வதேச அரங்கில் இந்தப் போட்டி குறித்து பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவியது.

உலகக்கோப்பையை வென்ற பிறகு, முதல் முறையாக அர்ஜென்டினா அணி விளையாடும் சர்வதேச போட்டி என்பதாலும், சொந்த நாட்டில் நடப்பதாலும் அர்ஜென்டினா ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை அதிகமாகக் கொண்டிருந்தனர்.

ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா அணியும் பனாமா அணியும் ஆக்ரோஷமாக மோதினர்.

முக்கியமான சாதனை ஒன்றைப் படைக்க கோல் போஸ்டை தொடர்ந்து முற்றுகையிட முயன்றார் லியோனெல் மெஸ்ஸி.

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் பனாமா அணி வீரர் கல்வான், மெஸ்ஸியை தடுக்க முயன்று மஞ்சள் அட்டை பெற்றார். கோல் போஸ்டை முற்றுகையிட மெஸ்ஸி முன்னேறியபோது அவரைத் தடுக்க அவரது காலில் மோதி மெஸ்ஸியை கீழே விழச் செய்தார் பனாமா வீரர்.

கீழே விழுந்த மெஸ்ஸிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டியது. அதைப் பொருட்படுத்தாமல் விளையாடிய மெஸ்ஸி, மஞ்சள் அட்டைக்கு எதிராக கிடைத்த ஃபீரிகிக்கை கோலாக்க தவறினார்.

நட்பு ரீதியிலான போட்டி என்ற போதிலும், காயம் ஏற்படும் அளவுக்கு போட்டி விறுவிறுப்பாக நடந்தது.

தொடர்ந்து, அர்ஜென்டினா அணி கோல் போஸ்டை முற்றுகையிட்டு வந்தது. அந்த அணியின் மெஸ்ஸி, டி மரியா, என்சோ பெர்னாண்டஸ், ஜூலியன் அல்வாரெஸ் என பலரும் கோலடிக்க முயற்சி செய்தனர்.

ஆனால் முதல் பாதி வரை பல முயற்சி செய்தும், அர்ஜென்டினா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

சாதனை படைத்த மெஸ்ஸி

இரண்டாவது பாதியிலும், அர்ஜெண்டினா அணி தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்தது. உலக சாம்பியன் அணியை தடுக்க பனாமா அணியும் பதில் தாக்குதலைத் தொடுத்து வந்தது. இதனால் பல முறை பனாமா அணி ஃபவுல் செய்தது.

75 நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், மெஸ்ஸி அடிக்கும் கோலை காண மைதானத்திற்கு வந்திருந்த 80 ஆயிரம் பேரும் அந்த ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தனர்.

பனாமா அணி செய்த தவறின் காரணமாக, அர்ஜெண்டினா அணிக்கு 4 முறை ஃபீரி கிக் வாய்ப்பு கிடைத்தது. முதல் மூன்று வாய்ப்பையும் கோலாக மாற்றத் தவறிய அர்ஜென்டினா, 77வது நிமிடத்தில் கிடைத்த ஃபீரிகிக் வாய்ப்பை கோலாக மாற்றியது.

மெஸ்ஸி அடித்த ஃபீரிகிக் கோல் கம்பத்தில் பட்டு திரும்பி வந்த போது, அதை மீண்டும் வலைக்குள் திணித்து கோலாக்கினார் அல்மாடா.

1-0 என முன்னிலை பெற்ற அர்ஜெண்டினா அணி, மற்றுமொரு சாதனையைப் படைக்க தன்முனைப்புடன் ஆடியது.

மெஸ்ஸி கோல் அடிக்க எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிரணி முழு திறன் கொண்டு தடுத்தது.

அத்தனை பேரையும் தாண்டி 88வது நிமிடத்தில் மெஸ்ஸி கோலடித்த போது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

தனது இடதுகாலால் மெஸ்ஸி அடித்த ஃபீரி கிக், கோல் கீப்பரை தாண்டி வலைக்குள் தஞ்சம் புகுந்தது.

இந்த கோல் மூலம் சர்வதேச அரங்கில், 800 கோல்கள் அடித்து சாதனை படைத்தார் மெஸ்ஸி. சர்வதேச அளவில், ரொனால்டோவுக்கு பிறகு இந்த பட்டியலில் அதிக கோலடித்து மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச போட்டிகளின் மூலம் 828 கோல்கள் அடித்திருக்கிறார்.

ஆட்ட நேர முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது அர்ஜென்டினா அணி.

போட்டி முடிந்த பிறகு, உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி மைதானத்தைச் சுற்றி கோப்பையுடன் வலம் வந்தது. ஒவ்வொரு வீரரும் உலகக்கோப்பையின் மாதிரியை கையில் வைத்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர்.