செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (14:52 IST)

தோழனிடம் இருந்து நாரையை பிரித்த உ.பி. அரசு - என்ன நடந்தது?

Stork
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்பவருடன் நட்பாக பழகி வந்த நாரையை பிரித்து பறவைகள் சரணாலயத்திற்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள மண்ட்கா என்ற கிராமத்தில் வசிக்கும் முகமது ஆரிஃப் ஒரு ஆண்டுக்கு முன்பு வயல்வெளியில் காயமுற்று கிடந்த நாரை ஒன்றை பார்த்து அதற்கு மருந்து வைத்து குணப்படுத்தினார்.

அந்த நாரையும் ஆரிஃபை விட்டு செல்லாமல் ஒருவருட காலமாக அவருடனே வாழ்ந்து வந்தது. ஆரிஃப் உண்ணும் தட்டிலேயே அது உணவு உண்ணும். அவரின் குடும்பத்தினரிடமும் அன்பாக பழகி வந்தது.

ஆரிஃப் எங்கு சென்றால் நாரையும் அவருடன் சென்றது. இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதன்பின்பு ஆரிஃப் - நாரை நட்பு குறித்து பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், ஆரிஃபிடம் இருந்து நாரையை உத்தரப் பிரதேச வனத்துறை அதிகாரிகள் எடுத்துசென்றுள்ளனர். இயற்கையான சூழலில் நாரை இருக்க வேண்டும் என்பதற்காக ரேபரேலியில் உள்ள சமஸ்புர் பறவைகள் சரணாலயத்துக்கு அது மாற்றப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து முகமது ஆரிப் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், நாரையை டெம்போ வாகனத்தில் அமர வைத்து ஆரிப் அழும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோவுடன் `என் நண்பனை வலுக்கட்டாயமாக வனத்துறையினர் எடுத்து செல்கின்றனர். என்னை தயவு செய்து காப்பாற்றுங்கள்` என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஆரிஃப் , நாரை இடையேயான நட்பு குறித்து கேள்விப்பட்ட அகிலேஷ் யாதவ் , நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக ஊடகப் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நாரை பறவைகள் சரணாலயத்திற்கு அழைத்து செல்லப்பட்ட செய்தி வெளியானதையடுத்து, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.

பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட அந்த நாரையை காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில், "உத்தரப்பிரதேச வனத்துறையினரால் அமேதியில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு ரேபரேலியில் உள்ள சமஸ்பூர் பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட நாரையை தற்போது காணவில்லை. பறவை விஷயத்தில் மாநில அரசு காட்டும் இந்த அலட்சியப்போக்கு முக்கியமாக பேசப்படவேண்டிய விவகாரம். பாஜக அரசு உடனடியாக நாரையை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் பறவை ஆர்வலர்கள் கொந்தளிக்க நேரிடும் " என்று அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ளார்.

புதனன்று செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், "நான் சந்திக்க சென்றதால் ஆரிஃபிடம் இருந்து நாரை பறிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஜனநாயகமா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாரை- ஆரிஃப் நட்பு

ஓராண்டுக்கு முன்பு கால் முறிந்த நிலையில் நாரையை கண்ட ஆரிஃப், இவ்வளவு பெரிய பறவையைக் கண்டு முதலில் பயந்தார். பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அதற்கு உதவ முன்வந்தார். பறவையை வீட்டிற்கு கொண்டு வந்து அதன் காலில் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு தடவி சிகிச்சை அளித்ததாக தெரிவித்தார் ஆரிஃப். அதன் காரணமாக பறவையின் கால் குணமானது. அதன் பின்னர், காட்டுப்பறவையான அந்த நாரை தன்னை விட்டு சென்றுவிடும் என்று அவர் நினைத்தார். ஆனால், அவர் கூடவே நாரை இருக்க தொடங்கியது.

”நாரை நாங்க சாப்பிடுவதையே சாப்பிடும். வீட்டில் சமைத்த உணவையே அதுவும் சாப்பிடும். பருப்பு, சாதம், காய்கறி மற்றும் ரொட்டியை சாப்பிடும். என்கூட சேர்ந்து சாப்பிடும். என் தட்டில் இருந்தும் எடுத்து சாப்பிடும். இந்த நாரையால் குடும்பத்தில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாரும் சந்தோஷமாக உள்ளனர். இது மிகவும் வித்தியாசமாக உள்ளது. இதுபோல திரைப்படங்களில்தான் பார்த்துள்ளேன். நிஜவாழ்க்கையில முதல்முறையாக இப்போதுதான் பார்க்கிறேன்” என்று ஆரிஃப் தெரிவித்திருந்தார்.

ஆரிஃப் தனது ஸ்கூட்டியில் எங்காவது செல்லும்போது, இந்த நாரை அவரைப் பின்தொடர்ந்து பறக்கும் . இது குறித்து அவர் பேசியபோது, `நான் 4 முதல் 5 கிலோமீட்டர் தூரம்வரை இதை கூட்டிச் சென்று வருவேன். சாலையில் மிகுந்த டிராஃபிக் இருப்பதால் அதிக தூரம் செல்வது இல்லை. அதுவும் என்னுடன் பறந்துவரும். அது தலைக்கு அருகே தாழ்வாக பறக்கும். அதிக உயரம் போகாது. வாகனங்கள் மீது மோதி விடுமோ என்ற பயம் இருக்கும். டிரக் வரும்போது உயரத்துக்கு சென்று, அது போனதும் மறுபடியும் என் கிட்ட வரும். இப்படி ஒரு நிகழ்வு என் வாழ்க்கையில நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை` என்று தெரிவித்திருந்தார்.