வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2023 (23:25 IST)

பிரபாகரன் உயிருடன் இல்லை என்று கூறிய முன்னாள் போராளி அச்சுறுத்தல் வருவதாக புகார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்ததை அடுத்து, தனக்கு தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவிக்கிறார்.
 
முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பிரபாகரனுடன் இறுதிவரை இருந்து போரிட்டதாக கூறியே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
 
இந்தப் பேட்டிக்குப் பிறகு தமக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக குறிப்பிட்டு வவுனியாவில் இன்று (2023 பிப்ரவரி 18) ஊடக சந்திப்பொன்றை அவர் நடத்தினார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடந்த 13ம் தேதி தமிழ்நாட்டில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்த கருத்தானது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பேசு பொருளாகியது.
 
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்பது தொடர்பில், இறுதிக் கட்ட யுத்தத்தின் இறுதித் தருணத்தில், பிரபாகரனுடன் களத்திலிருந்து போராடிய போராளியான அரவிந்தனிடம், பிபிசி தமிழ் வினவியது.
 
2009ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வரை தான், இறுதிக் கட்ட முள்ளிவாய்க்கால் மோதலில் ஈடுபட்டதாக அரவிந்தன் தெரிவித்திருந்தார்.
 
''எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புகின்ற கசப்பான உண்மை, அண்ணன் இல்லை என்பது தான்" என அரவிந்தன் அன்றைய தினம் கூறியிருந்தார்.
 
அரவிந்தன் வெளியிட்ட இந்த கருத்தானது, உலகம் முழுவதும் பாரிய பேசுப் பொருளாக மாறியது.
 
இந்த நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என தன்னால் பிபிசிக்கு வெளியிடப்பட்ட கருத்தை அடுத்து, தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அரவிந்தன், ஊடக சந்திப்பொன்றை நடத்தி இன்று (18) கூறியிருந்தார்.
 
''இன்றைய தினம், நேற்றைய தினம் உட்பட சில தினங்களாகவே நான் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய ஒரு நிலைமை காணப்படுகின்றது. பழ.நெடுமாறன் ஐயாவினுடைய, 'அண்ணன் வருகிறார்' என்ற கருத்துக்கு பதிலாக 'அண்ணன் இல்லை' என்ற கருத்தை நான் பிபிசிக்கு வழங்கியிருந்தேன். அதனைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் கருத்து கேட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, புலம்பெயர் தேசத்திலிருந்தும், இங்கே இருக்கக்கூடிய புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய இன்பராசா அவர்களிடம் இருந்தும் ஒரு அச்சுறுத்தல் வந்தது.
 
நான் இராணுவத்தோடு பணியாற்றுவதாகவும், கருணாவோடு பணியாற்றுவதாகவும் வட்டுவாகலில் நின்று போராளிகளை காட்டிக் கொடுத்ததாகவும் அவர் சில கருத்துக்களை என்னிடம் தெரிவித்திருக்கிறார். அது சார்ந்து ஃபேஸ்புக் பதிவுகள் சிலதையும் அவர்கள் இட்டிருந்தார்கள். அவர்கள் தொடர்பில் நான் கரிசனைப்பட வேண்டிய தேவையில்லை. நான் உண்மையை பேச வேண்டியவனாக இருக்கின்றேன்.
 
இப்போதும் நான் சொல்கின்றேன், துவாரகாவையோ, சார்லஸையோ, அல்லது அண்ணியையோ, அண்ணணையோ, பாலசந்திரனையோ கொண்டு வந்து, என் முன் நிறுத்துவார்களாக இருந்தால், நான் (வெளியிட்ட கருத்துக்காக) தற்கொலை செய்துகொள்ளக்கூட தயாராக இருக்கின்றேன். உண்மையானவர்களாக, இதனை சொல்ல வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். அண்ணன் இல்லை என்று கூறும் போது, எங்களுக்கு மிகுந்த வலியும், வேதனையும் ஏற்படக்கூடிய விடயம்." என அரவிந்தன் கூறினார்.
 
 
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அரவிந்தனுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
 
''நாங்கள் அச்சுறுத்தல் விடுக்கவில்லை. ஏன் தம்பி நீ இப்படி செய்தாய்" என்று முன்னாள் போராளியான அரவிந்தனிடம் தான் தொலைபேசியுடாக வினவியதாக அவர் கூறுகிறார்.
 
உணர்ச்சிவசப்பட்டு, கோபத்தில் கதைத்ததாகவும், தான் அச்சுறுத்தல் விடுக்கவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
 
தான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, இந்த சம்பவம் தொடர்பில் வினவியபோது, தனக்கும், அரவிந்தனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு வந்ததாக அவர் கூறுகிறார்.
 
 
நிச்சயமாக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
 
''அவர் உயிருடன் இருக்கின்றார். காரணம் என்னவென்றால், அவரது இறந்த உடலை 12,000 போராளிகளுக்கு இலங்கை அரசாங்கம் காட்டவில்லை. அதனால், அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியன இன்று வரை விடுதலைப் புலிகள் மீதான தடையை எடுக்காததும், அண்ணன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஒரு காரணம் என சொல்ல வேண்டும். நாங்கள் உண்மையைதான் சொல்கின்றோம். எங்களுடைய தேசிய தலைவர் உயிருடன் வந்தாலும், ஆயுத ரீதியாக வரமாட்டார். ஜனநாயக ரீதியாக வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் அவர் வரத்தான் போகிறார். ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கத்தான் போகிறது. எங்கட தமிழ் மக்களுக்கு வடக்கு, கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமை, ஜனநாயக ரீதியாக கிடைக்கத்தான் போகிறது" என தெரிவித்தார் கந்தசாமி இன்பராசா.