வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (22:53 IST)

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பரவிய தகவல் - இலங்கையில் மாறுபடும் அரசியல் கருத்துகள்

Prabhakaran
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்து, இன்று பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் மாறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
 
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவிடத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார். அது குறித்து பொதுமக்கள் பாதுபாப்பு முன்னாள் அமைச்சரும், முன்னாள் ராணுவ வீரருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம் பிபிசி தமிழ் வினவியது.
 
பிரபாகரன் பல லட்சக்கணக்கான உயிர்களை கொலை செய்துள்ளமையினால், அவர் தற்போது நரகத்திலேயே இருப்பார் எனவும், பழ.நெடுமாறன் நரகத்திற்கு சென்றே அவரை அழைத்து வர வேண்டும் எனவும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
 
''பிரபாகரன் தற்போது நரகத்தில் உள்ளார். நரகத்திலிருந்து வருகைத் தருவதற்கு பல பிறவிகள் காத்திருக்க வேண்டும். பல லட்சம் மக்களை அமானுஷ்யமாக கொலை செய்துள்ளமையினால், அவர் தற்போது நரகத்திலேயே இருக்க வேண்டும். அப்படியென்றால், இவரும் நரகத்திற்கு சென்றே அவரை மீண்டும் அழைத்து வர வேண்டும்." என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
 
இந்தியாவிடம் டிஎன்ஏ அறிக்கையை ஏன் பகிரவில்லை?
பிரபாகரன் உயிரிழந்தமையை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனை அறிக்கையை இந்தியா தொடர்ச்சியாக கேட்ட போதிலும், அந்த அறிக்கை இன்று வரை வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் சரத் வீரசேகரவிடம் நாம் வினவினோம்.
 
''அதனை செய்வதற்கான தேவை எமக்கு கிடையாது. பிரபாகரனை கொன்று, தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்தோம். மரபணு பரிசோதனை அறிக்கையை காண்பித்து, யாருக்கும் அதனை உறுதிப்படுத்தும் தேவை எமக்கு இல்லை. அதற்கான தேவை என்ன? பிரபாகரன் எம்முடைய எதிரி. இந்தியாவின் எதிரி அல்ல. அதனால், யாருக்கும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது.
 
"பிரபாகரன் உயிருடன் இல்லை" - பழ. நெடுமாறன் கூற்றை மறுக்கும் இலங்கை ராணுவம்
இலங்கையில் தேர்தல் நடக்குமா? பிரசாரத்தை ஆரம்பிக்காத வேட்பாளர்கள் - காரணம் என்ன?
பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது தொடர்பில் எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. பிரபாகரன் உயிரிழந்ததை கருணாஅம்மான் உறுதிப்படுத்தினார். அதனால் யாருக்கும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது" என சரத் வீரசேகர கூறினார்.
 
பிரபாகரன் தொடர்பான தமிழக தலைவர்களின் இவ்வாறான கருத்துக்கள் இலங்கை தமிழர்களை கஷ்டத்திற்கு உட்படுத்தும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
''பழ. நெடுமாறன் அறிந்து கதைக்கின்றாரா? அறியாமல் கதைக்கின்றாரா? என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் என்னை பொறுத்தவரையில் எமது அனுவத்தில் பிரபாகரன் உலகத்திலேயே இல்லை என்பதே என்னுடைய தகவல். அதை நான் நம்புகின்றேன். நான் குறுட்டுத் தனமாக நம்புவதோ, பொய்யாக பேசுவதோ இல்லை. இவர்களின் இப்படியான கருத்துக்கள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்பு சாதகமாக இருந்தது. ஆனால், இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பிறகும் அதை அவர்கள் தொடரும் போது, இங்குள்ள தமிழ் மக்கள் தான் கஷ்டப்பட போகின்றார்கள்.
 
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால், இன்று நாம் எவ்வளவு சௌகரியமாக இருந்திருப்போம். பிரபாகரன் இல்லை என்பதே உண்மை. ஆனால் அவர் என்ன மாதிரி இறந்தார் என்றதில் வாத பிரதிவாதங்கள் இருக்கின்றன. அதைப்பற்றி நான் இப்போது கதைக்க விரும்பில்லை." என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
 
 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் கூறுகையில், ''பழ.நெடுமாறன் ஐயா, தமிழீழ போராட்டத்துடன் பின்னிப் பிணைந்தவர். அவர் அப்படி சொல்வதாக இருந்தால் அதில் காரணங்கள் இருந்தால், அதை அவரே உறுதிப்படுத்த வேண்டும். போராட்டம் நடந்த இடம் வடக்கு கிழக்கு என்ற அடிப்படையில், இறுதிக் கட்டத்தில் நியாயமான போராட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை இலங்கை அரசாங்கமும், பல அமைப்புக்களும் உறுதிப்படுத்தியுள்ளன," என தெரிவித்தார்.
 
"பிரபாகரன் உயிருடன் இல்லை" - அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல்
''பழ. நெடுமாறன் வெளியிட்ட கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் முன்பே சொல்லியிருக்கின்றேன். அவரின் லட்சியங்கள் இருக்கக்கூடும். அது வேறு. ஆனால், அவர் இருக்கின்றார் என்று சொல்ல முடியாது. அது பிழை என்றே நான் சொல்வேன்" என உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
பிரபாகரனின் உறவினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறுகையில், பழ.நெடுமாறனின் அறிவிப்பின் ஊடாக விரைவில் உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைக்கப் பெறும் என கூறினார்.
 
''தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் சம்பந்தமாக, பழ.நெடுமாறன் ஐயா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கின்றார். இது 2009ம் ஆண்டு மே 18ஆம் தேதிக்கு பின்னர் இலங்கை அரசு தலைவர் பிரபாகரனின் உடல் என ஒரு உடலை காட்டிய போது, அது அவருடைய உடல் அல்ல, முடிந்தால், மரபணு பரிசோதனை அறிக்கையை காண்பிக்குமாறு சவால் விடுத்திருந்தேன். அவர்கள் அதற்கு முன்வரவில்லை. பரிசோதனை முடிவடைந்ததாக சொன்னார்கள். ஆனால் அது போலியானது. தலைவர் பிரபாகரனின் உடலை புதைத்து விட்டோம் என ஒரு தரப்பும், எரித்து விட்டோம் என கூறினார்கள். பிரபாகரனின் தயார் மற்றும் தந்தை ஆகியோர் ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்தார்கள். 2019ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி தலைவர் பிரபாகரனின் தந்தையார் இறந்து அவரது உடல் என்னிடம் கையளிக்கப்பட்டது. தகன கிரியைகள் நடைபெற்றன.
 
தாயார் என்னுடைய பொறுப்பில் இருந்து இறந்ததை தொடர்ந்து, அவருடைய உடலும் தகனம் செய்யப்பட்டன. அவர்களுடைய அஸ்தியை தலைவர் பழ.நெடுமாறன் ஐயாவிடமும், தலைவர் வைகோவிடமும், தலைவர் சீமானிடமும் அனுப்பி வைத்தேன். என்னிடமும் இருக்கின்றது.
 
இந்த சூழ்நிலையிலேயே டீ.என்.ஏ பரிசோதனையை இலங்கை அரசு இன்று வரை செய்யவில்லை. ஆகவே, இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒரு சந்தேகம் தொடர்ந்தும் இருக்கின்றது. அவருடைய மரண சான்றிதழை கூட இலங்கை அரசாங்கம் இன்னும் பதிவு செய்யவில்லை. நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை மாத்திரம் தாக்கல் செய்தார்கள்.
 
இந்த பின்னணியில் பழ.நெடுமாறன் ஐயா இந்த செய்தியை சொல்லியிருக்கின்றார் என்றால், எனக்கு தெரியாமல் இருக்கலாம். அனால், அவருக்கு தெரிந்திருக்கின்றது என்பதற்காக எனக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று இல்லை. இந்த அறிவிப்பானது, உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும். தலைவர் பிரபாகரனுடையது என காட்டப்பட்ட உடல் அவருடையது அல்லவென்பதை திட்டவட்டமாக கூறுகின்றேன்," என்கிறார்.