1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (15:56 IST)

மதுவுக்கு அடிமையான கணவர்கள், கைகொடுத்த கறவை மாடுகள்: சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

BBC
காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள், மதுப் பழக்கத்திற்கு அடிமையான கணவர்கள் வாங்கிய கடனை கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்த வருமானத்தில் அடைத்ததோடுபொருளாதாரத்திலும் முன்னேறியுள்ளனர்.

கொரோனா காலத்தில்கூட குன்னத்தூர் கிராமத்துப் பெண்கள் பால் உற்பத்தி மூலமாகக் கிடைத்த வருமானத்தால் கடன் வலையில் இருந்து தப்பித்துள்ளனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை மீட்டு, தங்களது குடும்பத்தின் வளர்ச்சிக்கு மாடுகள் உதவுவதால், அவற்றைப் பராமரிப்பதில் இந்த பெண்கள் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். பல வீடுகளில் மாடுகளை பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினராகக் கருதுவதாகச் சொல்கிறார்கள்.

சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குன்னத்தூர். வயல்வெளி, மேய்ச்சல் நிலம், சிறிய குட்டைகள், கிராமத்துக் கோயில்கள், ஆங்காங்கே பனைமரங்கள் என கிராமத்து அடையாளங்கள் நிரம்பிய பகுதி இது. 

நாம் குன்னத்தூர் கிராமத்திற்குச் சென்ற நேரத்தில், மேய்ச்சல் பகுதிகளில் மாடுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன. கிராமத்தில் 100 நாள் வேலையில் சில பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.

சுய உதவிக்குழு அலுவலகம் கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நாம் சென்றபோது, ஒரு குழுவாகச் சேர்ந்து பெண்கள் பாலில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளான பன்னீர் செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

நம்மிடம் முதலில் பேசிய ஜானகி, ''நான் இப்போது 15 மாடுகளுக்குச் சொந்தக்காரர். கணவரை மதுப் பழக்கத்திலிருந்து மெல்ல மீட்டு வருகிறேன். எங்கள் ஊரில் பல ஆண்களாக மதுப் பழக்கம் இருப்பதால், பெண்களாகிய நாங்கள்தான் குடும்பத் தலைவர்களாகவும் செயல்படுகிறோம்.

எனக்கு மூன்று மகள்கள். மூன்று பேரையும் பால் உற்பத்தியில் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் படிக்க வைத்தேன்,'' எனக் கூறுகிறார். கணவர் பெற்ற இரண்டு லட்சம் ரூபாய் கடனையும் பால் உற்பத்தியில் கிடைக்கும் வருமானம் மூலம் அவர் அடைத்துள்ளார். 

BBC


2008இல் குறிஞ்சி சுய உதவிக்குழுவில் இணைந்த இவர், முதலில் மாடு வாங்க ரூ.30,000 கடன் பெற்றார். அந்த மாட்டை பராமரித்து, தினமும் மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்வது, நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, சரியான உணவு கொடுப்பது என்று பால் உற்பத்திக்குத் தேவையான வேலைகளை கவனமாகச் செய்தார். அந்த மாட்டின் பாலை சுய உதவிக்குழுவின் பால் உற்பத்தி மையத்தில் செலுத்தி வந்தார்.

''சிறுக பணம் சேர்த்து, பணத்தை முதலீடு செய்து  முன்னேறியுள்ளேன். என்னிடம் இப்போது 15 மாடுகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.20,000 வரை பால் உற்பத்தியில் சம்பாதிக்கிறேன். தற்போது ஒரு மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். வீடு கட்டியிருக்கிறேன்,'' என்று ஜானகி தனது சாதனைகளை விவரிக்கும்போது பூரிப்பு அவரைத் தொற்றிக்கொண்டது.

ஜானகி போல பல நூறு பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணையவே, கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குழுக்கள் இணைந்து குன்னத்தூர் பஞ்சாயத்து அளவிலான சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு உருவானது. அதற்கு தலைமை ஏற்றவர் உமா மகேஸ்வரி.

கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இருந்த மதுக் கடையை அகற்றப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றதை நினைவு கூர்கிறார் உமா மகேஸ்வரி.

''எங்கள் ஊரில் பல பெண்கள் கடன் சுமையால் தத்தளித்த நேரத்தில்தான் சுய உதவிக்குழு அமைப்பு எங்களுக்குக் கைகொடுத்தது. 2008இல் பெண்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினோம். டாஸ்மாக் வாசலில் காலையில் நாங்கள் அமர்ந்துகொண்டோம்.

BBC


கடையை அகற்றும் வரை நாங்கள் வீடு திரும்பப்போவதில்லை என்று சொன்னதை அடுத்து, பல அதிகாரிகள் வந்தார்கள். உடனடியாக கடையை மூடினார்கள். எங்கள் கிராமத்தில் எங்கும் டாஸ்மாக் கடை இல்லை என்பது எங்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி,'' என்கிறார்.

மது அருந்தும் பழக்கம் உள்ள கணவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும் பிரச்னையால், பல பெண்களுக்கு மருத்துவச் செலவு, குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணம், அன்றாட செலவுகள் என எதற்கும் பணமில்லாமல் போனது.

முதலில் 12 பெண்கள் என்ற எண்ணிக்கையில் தொடங்கி இன்று சுமார் 500 பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இயங்குகின்றனர். சுய உதவிக் குழுக்கள் இணைந்து பஞ்சாயத்து அளவிலான சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பாகச் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அளவிலான சிறந்த சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு விருதை குன்னத்தூர் பெண்கள் 2014இல் பெற்றுள்ளனர்.

சுய உதவிக் குழு பெண்கள் சேர்ந்து நடத்தும் பால் உற்பத்தி மையத்திலிருந்து தினமும் 200 லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்து கொள்கிறது. கூட்டாக ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஐந்து லட்சம் ரூபாயை இந்தப் பெண்கள் பால் உற்பத்தி மூலம் பெறுகின்றனர். இதுதவிர மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் தயார் செய்கின்றனர்.

பால் உற்பத்திதான் அவர்கள் தொடங்கிய முதல் தொழில். அதில் 65 பெண்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, பன்னீர் தயாரிப்பது, பால் பொருட்களில் இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பது, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்குப் பாலில் இனிப்பு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வது எனப் பல விதமான உபதொழில்களைத் தொடங்கினர்.

தையல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு, குன்னத்தூர் பெண்கள் ஆடைகள், தனியார் நிறுவனத்திற்குத் துணிப் பைகளைத் தைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அடுத்ததாக, பலவிதமான கைத்தொழில்களை ஒரே இடத்தில் கற்றுக் கொள்வதற்கான மையம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தைக் கையில் எடுக்கவுள்ளனர்.

BBC


''கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரிய தொழிலதிபர்கள்கூட முடங்கிப் போனார்கள். எங்கள் ஊரில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் ரூ.25000 வரை சம்பாதித்தார்கள்.

பொருளாதார சிக்கலைச் சந்திக்கவில்லை. அதற்குக் காரணம் இந்த பால் உற்பத்தி தொழில்தான். பால் உற்பத்தி தொழிலால் குன்னத்தூரில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்கூட தொழில் முனைவோராக மாறியுள்ளனர்,'' என்கிறார் உமா மகேஸ்வரி.

தனி ஆளாக இருந்துகொண்டு தனது பெற்றோரையும் தனது குழந்தையையும் பராமரிக்க மாடுகள் உதவியதால், அவற்றை மிகுந்த பாசத்தோடு பார்த்துக் கொள்கிறார் கலையரசி. 

''2010இல் என் கணவர் என்னை விட்டுச் சென்றுவிட்டார். குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். என் தந்தை வயதானவர், அண்ணன் கால் உடைந்து வீட்டிலிருந்தார். வாழக்கையை  எப்படி எதிர்கொள்வது என்ற பயத்தில் இருந்தேன். பல நாட்களாக இரவு தூக்கம் இல்லை.

என் தோழிகள் சுய உதவிக்குழுவில் இருந்து மாடு வாங்கி பால் உற்பத்தி செய்வதை அறிந்துகொண்டு, தயக்கத்தோடு முதல் மாடு வாங்கினேன். என்னிடம் இப்போது ஐந்து மாடுகள் உள்ளன. மாதம் ரூ.20,000 சம்பாதிக்கிறேன். என் அண்ணனின் திருமண செலவுகளுக்கு நான் பணம் கொடுத்தேன்,'' என்கிறார் கலையரசி.

நம்மிடம் தங்களது வெற்றிக் கதைகளைச் சொல்லி முடித்த பெண்கள், தங்களது மாடுகளை அழைத்து வரச் சென்றனர். உமாமகேஸ்வரி, சுய உதவிக்குழு அலுவலகத்தில் இருந்து பெரிய பால் கேன்களை வெளியில் கொண்டு வந்து வைத்தார்.

ஆவின் கொள்முதலுக்காக பாலை எடுத்து வந்த பெண்களின் வரிசை நீளமானது. ஜானகி 10 லிட்டர் பாலை கேனில் ஊற்றிவிட்டு, தனது வங்கிக் கணக்கில் பணம் அதிகமாவதை மகிழ்ச்சியுடன் நம்மிடம் காண்பித்தார்.