ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2023 (13:40 IST)

தமிழர் கடல் நகரம் பூம்புகார் 15000 ஆண்டுகள் பழமையானதா?

BBC
2,500 ஆண்டுகள் பழமையானது என கருதப்படும் பூம்புகார், சுமார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என்கிறது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வுத்துறையின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட சமீபத்திய ஆய்வு.

மேலும், இந்த ஆய்வில் பூம்புகாரின் தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 30-40 கி.மீ தூரத்தில் கடலுக்குக் கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீ. பரப்பில் ஒரு துறைமுக நகரம் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

ஆனால், இந்த ஆய்வு அறிவியல்பூர்வமானது இல்லையென்றும், 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் பொறியியல் சார்ந்த திறன்கள் இல்லை என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் மறுப்பு வாதத்தை முன்வைத்துள்ளனர். எதன் அடிப்படையில் இந்த வயது எட்டப்பட்டது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

உலகின் பல பகுதிகளிலும் பெருவாரியான நகரங்கள் கடலோரப் பகுதிகளிலே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பண்டைய அரசுகளின் தலைநகரங்களாகவும் பண்டைய துறைமுக நகரங்களாகவும் விளங்கியுள்ளன. 

சோழ மன்னர்களால் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டதாகவும் பின்னர் கடலுக்குள் புதையுண்டதாகவும் கருதப்படும் பூம்புகார் துறைமுக நகரம் குறித்து, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவேரிப்பூம்பட்டினம் என்றும் பூம்புகார் அழைக்கப்படுகிறது. 

பூம்புகார் நகரம் முதன்முதலாக கட்டமைக்கப்பட்ட இடம் மற்றும் காலம் , பின்நாளில் அது இடங்கள் மாறி இருந்தால் அதற்கான இடங்கள் மற்றும் கால வரையறைகள் உள்பட, பூம்புகார் பற்றிய பல உண்மைகள் இன்றுவரை புதிராகவே உள்ளன. 

”15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது”

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் பல கோடி நிதி உதவியோடு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

”தற்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூம்புகார் துறைமுக நகரத்தில் ஒரு துறைமுகம், அதன் அருகே மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச் சுற்றிலும் பல விதமான கட்டிடங்களைக் கொண்ட குடியிருப்புகள் மற்றும் கலங்கரை விளக்கமும் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன” என, பேராசிரியரும் பூம்புகார் ஆய்வுத்திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான எம். ராமசாமி கூறுகிறார். 
BBC

இந்த ஆய்வு, தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. முதல் 40 கி.மீ வரை உள்ள சுமார் 1,000 சதுர கி.மீ.களில் MBES சர்வே (ஒலிசார் கடல் கீழ் தரை மட்ட அளவீடு), தேசிய கடல் சார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த MBES சேகரித்த கடல் கீழ் தரை மட்டத்தின் தகவல்களை சுமார் 1,000 க்கும் மேற்பட்ட வகைகளில் கணணி சார் செயல் ஆக்கம் செய்து ஆராயப்பட்டது. 

2,500 ஆண்டுகள் பழமையானது என கருதப்பட்ட பூம்புகார் துறைமுக நகரம், சுமார் 15,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளுள் முக்கியமானது என்கிறார், எம். ராமசாமி. 

உலகிலேயே மிகப்பழமையான துறைமுக நகரமாக பூம்புகார் இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். 

ஆய்வு கூறுவது என்ன?

”இந்த ஆய்வில் காவிரி வண்டல் பகுதிகள் இந்திய செயற்கைக்கோள் படங்கள் மூலமும் மற்றும் கடல் கீழ் பகுதிகள் GEBCO (ஜெப்கோ - பல்துறை சார் கடல் கீழ் தரைமட்ட அளவு) மற்றும் MBES மூலம் ஆராயப்பட்டன. ஜெப்கோ மூலம் நடத்திய முதற்கட்ட ஆய்வுகள் மூலம் கடலுக்குக் கீழே 40 கி.மீ. தூரம் வரை மூன்று மிகப்பெரிய டெல்டாக்களை காவிரி நதி உருவாக்கி இருப்பது தெரியவந்தது” என்கிறார் அவர்.

மேலும், அவர் கூறுகையில், ”பூம்புகார் நகரம் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டது என்றுதான் தற்போதுவரை நம்பப்படுகிறது. ஆனால்,  தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 30-40 கி.மீ தூரத்தில் கடலுக்குக் கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீ. பரப்பில் பூம்புகார் துறைமுக நகரம் இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர் காரணமாக, பூம்புகார் நகரம் தற்போதைய இடத்திற்கு வந்திருக்கலாம்” என்கிறார் ராமசாமி. 

இந்த துறைமுகம் வடக்கு-தெற்காக 11 கி.மீ நீளமும் கிழக்கு-மேற்காக 2.5 கி.மீ அகலமும் கொண்டு இருந்தது என்றும், இதில் வடக்கு - தெற்காக நீண்ட கால்வாய்கள் கப்பல்கள் போக்குவரத்துக்காகவும், குறுக்குக்கால்வாய்கள் கப்பல்களை திருப்புவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடும் எனவும்  இவை சரக்குகளை ஏற்றி-இறக்கவும், சேமித்துவைக்கவும் இவை  துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 70-80 கப்பல்களை நிறுத்த பயன்படுத்துவதற்காக இருந்து இருக்கலாம் என்றும் ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

”துறைமுகத்திற்கு 10 கி.மீ. வடக்கே அழிந்த நிலையில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு வடக்கே சுமார் 4 சதுர கி.மீ. பரப்பளவில் மணலால் மூடப்பட்ட குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் துறைமுகத்திற்கு வடக்கே வடக்கு-தெற்காக காணப்படுகின்ற மணல்மேட்டில் சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு காம்பவுண்ட் சுவற்றுக்கு உள்ளே கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் காணப்படுகின்றன. இதேபோன்று துறைமுகத்திற்கு 10 கி.மீ. தென்கிழக்கிலும் காம்பவுண்ட் உடன் கூடிய , ஆனால் உள்ளே உள்ள கட்டடங்கள் அழிந்த நிலையில் உள்ள குடியிருப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் கூறுகிறார். 
BBC

சுனாமி, கடல்மட்ட உயர்வு, வெள்ளம், புயல் எழுச்சி போன்ற பேரிடர்கள் இடம்மாறி வந்த பூம்புகாரை அழித்து இருக்கக்கூடும் என தெரிவிக்கிறார் எம். ராமசாமி.

பூம்புகாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வடிவமைக்க சுமார் 12 நிறுவனங்களை இணைத்து இந்த ஆய்வு தொடர்ந்துவருவதாகவும் இங்கு கிடைத்த தடயங்களை கார்பன் டேட்டிங் செய்வதும் அடுத்தக்கட்ட ஆராய்ச்சி என்றும் அவர் கூறுகிறார்.

”இன்னும் ஆதாரங்கள் வேண்டும்”

ஆனால், இந்த ஆய்வை முற்றிலும் ஏற்க மறுக்க மறுக்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர் செல்வக்குமார் கூறுகையில், ”இது உறுதிபடுத்தப்படாத ஆய்வாக இருக்கிறது. சில அறிவியல் ரீதியாக படங்களை வைத்துக்கொண்டு அதனை சொல்கின்றனர். அங்கு தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அதுவரை இதனை ஒரு யூகமாகத்தான் கருத வேண்டும். ஏனெனில், 15,000 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒரு நகரம் இருந்திருக்க வாய்ப்பில்லை. தொல்லியல் ஆய்வுகளில் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் நமக்குக் கிடைத்திருக்கிற சான்றுகளின்படி நாம் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மக்கள் குழுவாகத்தான் இருந்திருக்கிறோம். கற்கால கருவிகள் தான் கிடைத்திருக்கின்றன. அப்போது உலோகமே இல்லை. அந்த காலத்தில் இதுவரை கட்டிடப் பகுதிகள் கிடைக்கவில்லை. 15000 ஆண்டுகளுக்கு முன்பு என்பது மிகமிகப் பழமையான காலக்கட்டம்” என்கிறார்.

இந்த ஆய்வில் கிடைத்துள்ள படங்களில் உள்ள அமைப்புகள் இயற்கையானதா அல்லது மனிதர்கள் உருவாக்கியதா என்பது தெரியவில்லை என்றும் அடுத்தக்கட்ட ஆய்வுகள் செய்யும்போதுதான் அதனை உறுதியாக சொல்ல முடியும் என்கிறார் அவர்.

படங்களை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் உருவகப்படுத்திக்கொள்ள முடியும் என்பது செல்வக்குமார் போன்ற தொல்லியல் ஆய்வாளர்களின் வாதமாக உள்ளது. 

பூம்புகாரில் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வுகள் குறித்து பேசிய அவர், “இந்திய தொல்லியல் துறை, தேசிய கடலாய்வு நிறுவனம் ஏற்கனவே பூம்புகாரில் நடத்திய ஆய்வுகளில், கி.மு. 300 காலக்கட்டத்திலான உடைந்த கப்பல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புத்த விகாரை குறித்த சான்றுகள் உள்ளன. இந்த சான்றுகளை தெளிவாக நாம் பார்க்க முடியும். ஆனால், இந்த சமீபத்திய ஆய்வில் நீருக்கடியில் கிடைத்துள்ள படங்களை வைத்து சொல்கின்றனர். ஆனால், அதனை நாகரிகம் என கூறுவதற்கு நமக்குக் கூடுதல் ஆதாரங்கள் வேண்டும்.” என தெரிவித்தார்.

கடலுக்கடியில் தொல்லியல் ஆய்வுகள் நடத்துவது சாத்தியம் என்று கூறும்  அவர், அதற்கு நிறைய பொருட்செலவாகும் என தெரிவிக்கிறார்.

இந்த ஆய்வையொட்டி இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. பூம்புகாரில் துறைமுகம் இருந்திருக்கிறது என்றால், அவர்கள் வேறு எந்த துறைமுகத்துடன் தொடர்பு வைத்திருந்தனர்? இந்த துறைமுகம் பழமையானதா அல்லது அவர்கள் தொடர்பு வைத்திருந்த துறைமுகம் பழமையானதா போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும், அங்கு கிடைத்துள்ளதாக கூறப்படும் கட்டிட அமைப்புகள் என்ன பொருளால் ஆனவை என்பது குறித்தும் இந்த ஆய்வில் ஆவணப்படுத்தப்படவில்லை. 

கீழடி, சிவகளை உள்ளிட்ட அகழாய்வுகளில் கிடைத்துள்ள பொருட்கள் கண்கூடாக உள்ள நிலையில், இந்த ஆய்வுக்காக ஆதாரங்கள் தெளிவாக இல்லை என்பதும் எதிர்வாதமாக இருக்கிறது. 

“ஆரம்பத்தில் எல்லா ஆய்வுகளையும் எதிர்க்கத்தான் செய்வார்கள்”

ஆய்வுக்கு எழும் மறுப்புகள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்த பேராசிரியர் ராமசாமி, “ அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. அறிவியல்ரீதியாகத்தான் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறோம். கடல் கீழ் தரைமட்டத்தை 10 செ.மீ வரை துல்லியமாக கணித்து அதனை முப்பரிமாண படங்கள் வாயிலாக ஆய்வு செய்திருக்கிறோம். அதில்தான் இவற்றை கண்டறிந்துள்ளோம்” என்றார்.

மேலும், எந்த புதிய ஆய்வுகளுக்கும் விமர்சனங்கள் எழுவது வழக்கம்தான் எனக்கூறும் அவர், அடுத்தகட்டமாக கடலுக்கடியில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 இடங்களில் ஆ்ழ்கடல் புகைப்படங்கள் எடுக்கப்படும் என தெரிவித்தார். 

“ஆய்வில் கிடைத்துள்ள கட்டுமானங்கள் கட்டப்பட்டவை அல்ல, வெட்டப்பட்ட கட்டுமானங்கள். கடல் மணலை வெட்டி துறைமுகத்தை நிர்மாணித்திருக்கின்றனர். வேறு எந்த துறைமுகத்துடன் தொடர்பு கொண்டிருப்பார்கள் என்பதெல்லாம் அடுத்தகட்ட ஆய்வுகளில் தெரியவரும். இதுவரை கண்டுபிடித்திருப்பதே பெரியது. எடுத்ததும் இந்த ஆய்வை மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. நாங்கள் ஆய்வில் கண்டவற்றை நம்புகிறோம்” என்றார்.