1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (15:32 IST)

'பேய் விரட்டும் சடங்கு' - பிரம்படியால் பலியான 9 வயது இலங்கை சிறுமி

இலங்கை தலைநகர் கொழும்பு அருகே 'பேய் விரட்டும் சடங்கு' என்று உள்ளூரில் நம்பப்படும் சடங்கு ஒன்றுக்கு உட்படுத்தப்பட்ட ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
 
இந்த நிகழ்வு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தெல்கொட எனும் நகரத்தில் நிகழ்ந்துள்ளது. பேய் விரட்டும் சடங்கின்போது சிறுமி கடுமையாக பிரம்பால் தாக்கப்பட்டதே உயிரிழப்புக்குக் காரணம் என்கிறது காவல் துறை.
 
குழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக அக்குழந்தையின் தாய் மற்றும் 'பேய் விரட்டும் சடங்கை' நடத்திய பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.
 
அந்த சிறுமியின் தாய் தனது மகளுக்கு ''கெட்ட ஆவி பிடித்துள்ளது'' என்று நம்பியதாகவும் அதனால் தனது மகளை அதுபோன்ற சடங்குகளைச் செய்யும் ஒரு பெண்ணிடம் அழைத்துச் சென்றதாகவும் காவல் துறை தெரிவிக்கிறது. இந்த சடங்கின் பொழுது, பிரம்பால் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்பு அங்கு அவர் உயிரிழந்தார்.
 
அந்த சிறுமியின் நெற்றியில் எண்ணெய் தேய்க்கப்பட்டு, அவர் பிரம்பால் தாக்கப்பட்டார் என்று காவல் துறையினர் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அழுகுரல் கேட்டு அந்தச் சிறுமியைப் பாதுகாக்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் அச்சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.
 
இதுபோன்ற பேய் விரட்டும் சடங்குகள் காரணமாக மனிதர்கள் காயமடைவது மற்றும் உயிரிழப்பது இப்பகுதியில் இது முதல்முறை அல்ல என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.