புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : வெள்ளி, 31 மே 2019 (19:52 IST)

ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி

ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி
 

அம்மான்காரனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். சில அன்பர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்.

குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம். கவனத்துடன் அதைத் தவிர்த்துக் கொள்ளவும். உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும்.

தொழில் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆயினும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள்.

பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள். 

மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே  செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்  எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

அஸ்தம்:
இந்த மாதம் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

சித்திரை 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள்   நலனில் அக்கறை காட்டுவது நல்லது.  

 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு துளசி கொடுத்து வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். பொருளாதார சிக்கல்கள் அகலும். 

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, 22