1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வெள்ளி, 31 மே 2019 (19:34 IST)

ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

ரத்தகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்து கொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள்.

குடும்பத்தில் பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும்.

தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை.

மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.

அஸ்வினி:
இந்த மாதம் பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

பரணி:
இந்த மாதம் சுகம் உண்டாகும். பணவரத்து கூடும்.  எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  தைரியம் உருவாகும்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் வாக்குவன்மை உயரும். அதனால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.  வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

பரிகாரம்: தினமும் முருகன் ஆலயத்திற்குச் சென்று கந்த சஷ்டி கவசம் சொல்லி வர மனதில் அமைதி மேலோங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10