செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Suresh
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2015 (13:27 IST)

தமிழகம் - 2015: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல்

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார்.


 

 
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி,  ஜான் மைக்கேல் டி குன்ஹா 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இதனால் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியிலிருந்து  நீக்கப்பட்டார்.
 
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் 2015 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட குற்றம் சாற்றப்பட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
 
இதைத் தொடர்ந்து, ஜுன் 23 ஆம் தேதி ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடாமல் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
 
இதனால், ஜெயலலிதா தொடர்ந்து முதலமைச்சராக நீடிக்க வேண்டுமானால், 6 மாதத்தில் தமிழகத்தில் இருந்து ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றிபெற வேண்டும் என்றநிலை ஏற்பட்டது.
 
இந்நிலையில், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக, சென்னை ஆர்.கே.நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் 2015 மே மாதம் 17 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
 
இதனால், அந்த தொகுதிக்கு ஜூன் மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில், அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
 
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சி.மகேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 26 பேர் சுயேச்சையாக போட்டியிட்டனர். இந்தத் தேர்ததில் மொத்தம் 28 பேர் களத்தில் நின்றனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்தன.
 
இந்த இடைத் தேர்தலில், மொத்தம் 74.4 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 181 ஆவது வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியலைவிட கூடுதல் வாக்குகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டு, அதனால் அந்த வாக்குச் சாவடிக்கு மட்டும்  ஜூன் 29 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை   ஜூன்  30 ஆம் தேதி 17 சுற்றுகளாக நடைபெற்றன. இதில், அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 1 லட்சத்து 60 ஆயிரத்து 432 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சி.மகேந்திரன் 9,710 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி 4,590 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
 
இதன் மூலம், 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
 
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா, ஜூலை 4 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில், சபாநாயகர் தனபால் முன்னிலையில் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.