வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Murugan
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (16:04 IST)

மும்பையை கலக்கிய ஷீனாபோரா கொலை வழக்கு

தன் மகள் ஷீனாபோராவை அவரது தாய் இந்திராணியே கொன்ற சம்பவம் 2015 ஆம் ஆண்டில் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

 
மும்பை தொழில் அதிபர் இந்திராணியின் மகள் ஷீனாபோரா 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு ஒரு வனப்பகுதியில் வீசப்பட்டார். அவரது பிணத்தை கைப்பற்றிய மும்பை போலிசாருக்கு இறந்து போனது இந்திராணியின் தங்கை என்று கண்டுபிடித்தனர்.  இந்த விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காததால் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது.
 
அந்நிலையில், அந்த கொலை நடந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷாம் மனோகர் ராய், மும்பை போலிசாரின் ஒரு வாகன சோதனையில் துப்பாக்கியுடன் பிடிபட்டார். அவரிடம் போலிசார் நடத்தியதில்தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
 
அவர்தான் ஷீனாவை கொன்றது இந்திராணி என்றும், ஷீனாவின் உடலை தான்தான் வனப்பகுதியில் வீசி எறிந்தேன் என்றும் வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து போலிசார் இந்திராணியை கைது செய்தனர். அதன் பின் இந்த வழக்கு சிபிஐ க்கு மாறியது.
 
விசாரணையின் ஆரம்பத்தில், இந்திராணி போலீசாருக்கு தகுந்த ஒத்துழைப்பை வழங்கவில்லை. ஆனால் போலிசார் எல்லா உண்மைகளையும் வெளியே கொண்டுவந்தனர்.

43 வயதாகும் இந்திராணி, முதலில் சித்தார்த் தாஸ் என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு பிறந்தவர்தான் ஷீனாபோரா. அதன் பின் அவர் சஞ்சீவ் கண்ணா என்பவரை திருமணம் செய்தார். சஞ்சீவ் கண்ணாவிற்கு பிறந்த மகள் வித்தி. அதன் பின் 2002 ஆம் ஆண்டு சஞ்சீவை விவாகரத்து செய்துவிட்டு பீட்டர் முகர்ஜி என்பவரை திருமணம் செய்தார். தனது இரண்டு முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த ஷீனாவையும், வித்தியையும், இந்திராணி, பீட்டர் முகர்ஜியிடம் தனது தங்கைகள் என்று அறிமுகம் செய்தார்.


 
 
ஷீனாபோரா, பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவிக்கு பிறந்த ராகுலை காதலித்தார். சகோதர உறவு முறையினர் காதலிக்கிறார்களே என்று கோபமடைந்த இந்திராணி, உண்மையை சொல்ல முடியாமல், அவர்கள் இருவரையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் இந்திராணியின் பேச்சை கேட்கவில்லை. இதுதான் இந்திராணிக்கு ஷீனாவின் மீது வெறுப்பு ஏற்பட்டதற்கு முதல் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்தது.
 
மும்பை போலிசார், இந்திராணியின் கார் டிரைவர் ஷாம் மனோகரிடம் நடத்திய விசாரணையில், பெற்ற மகளை இந்திராணியே கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் அம்பலமானது. மும்பையில் பணக்காரர்கள் வசிக்கும் மேற்கு பாந்த்ரா பகுதியில் மூன்று படுக்கை வசதி கொண்ட சொகுசு வீடு வாங்கித் தரும்படி ஷீனா, இந்திராணியை மிரட்டினார். ஆனால் இந்திராணி சம்மதிக்கவில்லை. அதனால், இந்திராணியின் முதல் திருமணம் உட்பட பல ரகசியங்களை அவரின் கணவர் பீட்டர் முகர்ஜியிடம் கூறப்போவதாக ஷீனா மிரட்டினார். இதில் பயந்துபோன இந்திராணி “அப்படி எதுவும் செய்து விடாதே” என்று கெஞ்சினார்.  அப்படியெனில் எனக்கு வீடு வாங்கித் தரவேண்டும் என்று ஷீனா கூறிவிட்டார்.
 
 ஷீனா கொடுத்த அழுத்தம் காரணமாக, கோபமடைந்த இந்திராணி அவரை கொலை செய்ய முடிவு செய்தார். ஏற்கனவே திட்டமிட்ட படி 2012ம் ஆண்டு எப்ரல் மாதம் 12ம் தேதி ஷீனாவுடன் வெளியே புறப்பட்டார். அவரின் முன்னாள் கணவர் கன்னாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டார். நான் காரை ஓட்டினேன். பாந்த்ரா புறநகர்ப் பகுதியில் சென்றபோது திடீரென ஷீனாவின் கழுத்தைப் பிடித்து “மூன்று படுக்கை வீடுதானே வேண்டும். தொலைந்து போ” என்று மிகுந்த ஆத்திரத்துடன் ஷீனாவின் குரல் வளையை நெறித்துக் கொன்றார். அதன் பின் ராய்காட் மாவட்டத்தில் ஷீனாவின் உடலை அடுத்த நாள் புதைத்தோம்” என்று விசாரணையில் ஷாம் மனோகர் வாக்குமூலம் கொடுத்தார்.
 
அவரின் வாக்குமுலத்தையடுத்து போலிசாரின் பிடி இந்திராணியின் மீது இறுகியது. அதன் பின் அவரின் கணவர் பீட்டர் முகர்ஜியை நவம்பர் 19 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர் மீது குற்ற்ச்சதி, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவரை சிபிஐ அதிகாரிகள் தங்களது காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
 
அதனிடையில், ஷீனாவின் காதலரும், பீட்டர் முகர்ஜியின் மகனுமான ராகுலிடம் சிபிஐ அதிகாரிகள் நவம்பர் மாதம் நடத்திய விசாரனையில், ஷீனாபோரா அவரது தாயை மிரட்டியதற்கான சில முக்கியமான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். 
 
இந்த வழக்கு விசாரணை இன்னும் போய் கொண்டிருக்கிறது.