வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Murugan
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (18:03 IST)

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சல்மான்கான் விடுதலை

கடந்த 2002ல் இந்தி நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் (கீழமை) நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு, மே மாதம் தீர்ப்பு வழங்கியது.  ஆனால் அந்த தீர்ப்பை ரத்து செய்த மும்பை உயர் நீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி சல்மான்கானை விடுதலை செய்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை கிளப்பியது.


 

 
நடிகர் சல்மான்கான், 2002 ஆம் ஆண்டு ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து விட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது, அவரது கார் ஏறி, சாலையில் உறங்கிக் கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதனால் சல்மான்கான் மீது மும்பை போலிசார் வழக்கு பதிவு செய்தார்கள். 
 
ஆனால் இந்த விபத்தின் போது, தான் மது அருந்தி காரை செலுத்திவில்லை என்றும், தனது டிரைவர் அசோக்சிங் தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார் என்றும் போலிசாரிடம் நடிகர் சல்மான் கான் வாக்குமூலம் அளித்தார். இதையே அவரது டிரைவரும்   நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 
 
முதலில், இந்த வழக்கை விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் பின்பு  விசாரணையை செசன்சு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்திரவிட்டது. அதன்படி, செசன்சு நீதிமன்றத்தில் மறுவிசாரணை தொடங்கியது
 
அந்த வழக்கில், காயம் அடைந்த கலிம் முகமது பதான், முன்னா மலாய் கான், அப்துல்லா ராப் சேக், முஸ்லிம் சேக் , சல்மான் கானின் போலீஸ் மெய்க்காவலர் ரவீந்திர பாட்டீல் மற்றும் பலர் சல்மான்கானுக்கு எதிராக நீதி மன்றத்தில் நேரில் சாட்சி அளித்தனர்.
 
சல்மான்கான் நடிக்கும் படங்களின் வியாபார மதிப்பு 200 கோடியாக இருந்தது. எங்கே சல்மான் சிறைக்கு சென்றால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ  என்று பாலிவுட் தயாரிப்பாளர்கள் அஞ்சினர்.
 
கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற அந்த வழக்கு விசாரணை  2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, மே 6 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 
 
கார் விபத்தின் போது, நடிகர் சல்மான்கான் மது போதையில் இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், நடிகர் சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை செசன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அதனால், சல்மான் கானுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அப்போது கூறப்பட்டது.
 
தீர்ப்பு வெளியானதும், நீதிமன்ற வளாகத்திலேயே, சினிமா துறையை சேர்ந்த ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தன் சினிமா வாழ்க்கையின் எதிர்காலத்துக்கு, சல்மான்கான் உதவுவார் என்று நம்பியிருந்த வேளையில், இந்த தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் தன் தற்கொலைக்கு காரணம் கூறினார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உயிர் பிழைத்தார். 
 
நடிகர் சல்மான்கான் தீர்ப்பு குறித்து, அன்று காலை முதலே பாலிவுட் உலகம் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்து இருந்து. ஆனால், நடிகர் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதால் பாலிவுட் கடும் அதிர்ச்சி அடைந்தது.
 
நீதிபதி வழங்கிய தீர்ப்பில், நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  அந்த வழக்கில் இருந்து விடுதலையான பின்பே, திருமணம் செய்து கொள்வேன் என்று சல்மான் கூறியிருந்தார். ஆனால், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், சல்மான்கான் திருமணமும் தள்ளிப்போனதாக பேசப்பட்டது.


 

 
அதன்பின், மும்பை கீழமை நீதிமன்றம் தனக்கு அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும், தனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் சல்மான்கான் மும்பை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அதையடுத்து மே மாதம் 8 ஆம் தேதி சல்மான்கானுக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
 
அதற்கிடையில், மகாராஷ்டிர மாநில அரசிடம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் மன்சூர் தர்வேஷ் என்பவர்,  சல்மான் கான் கார் விபத்து பற்றிய வழக்கு தொடர்பான பைல்களை தர வேண்டும் எனக்கோரி விண்ணப்பித்தார். ஆனால் மகாராஷ்டிரா அரசோ, மாநிலைத் தலைமைச் செயலகமான மந்திராலயாவில், 2012 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், நடிகர் சல்மான் கான் தொடர்பான பைல்கள் எல்லாம் எரிந்து போய்விட்டது என அற்புதமான பதிலை தெரிவித்தது.
 
ஜாமீனில் வெளிவந்த சல்மான்கான் மீண்டும் வழக்கம்போல் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரின் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்று  பல கோடிகளை வசூல் செய்தன. மறுபுறம் வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. வழக்கின் இறுதி தீர்ப்பு 2015 டிசம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படும் மும்பை உயர் நீதிமன்றம்  தெரிவித்தது. 
 
இறுதி தீர்ப்பு சல்மானுக்கு ஆதரவாகவே அமைந்தது. சல்மான்கான் மீதான குற்றாசாட்டை மகாராஷ்டிர அரசு நிரூபீக்க தவறிவிட்டதாக காரணம் கூறிய நீதிபதிகள், அந்த வழக்கிலிருந்து நடிகர் சல்மான்கான் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தனர். மேலும் கீழமை நீதிமன்றம் சட்டபூர்வமாக இந்த வழக்கை அனுகவில்லை என்றும் தீர்ப்பில் கூறினர்.  அந்த தீர்ப்பை கேட்டு ஆனந்த கண்ணீர்விட்ட சல்மான்கான், இந்த தீர்பை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.
 
ஆனாலும், மும்பை உயர்நீதிமன்றம் சல்மான்கானை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தி மேல் முறையீடு செய்யப்படும் என மகராஷ்டிர அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.