படிக்காதவன் என்று பெயர் வைத்ததால் லாஜிக் பற்றி எந்தக் கவலையும் படவில்லை இயக்குனர். இதனால் தமிழ் சினிமாவுக்கு லாபம் மற்றுமொரு கமர்ஷியல் படம். ஆனால், நமக்கு...? படித்த குடும்பத்தில் படிக்காத ஒரேயொருவர் கடைக்குட்டி தனுஷ். பத்தாம் வகுப்பையே தாண்டாத இவரை படுத்தியெடுக்கிறார் படித்த தந்தை, பிரதாப் போத்தன். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? நண்பர்கள் குழாம் டூட்டோரியல் காலேஜில் சேரச் சொல்கிறது. ஆனால், காலேஜையே இழுத்து மூடும் அளவுக்கு ரவுசு காட்டுகிறார் தனுஷ். படித்த பெண்ணை காதலித்து மணந்தால் தானாக கௌரவம் வந்து சேரும் என அடுத்த ஐடியா கொடுக்கிறார்கள் நண்பர்கள். தனுஷும் கல்லூரியில் படிக்கும் தமன்னாவை காதலிக்கிறார். தமிழ் சினிமாவின் வழமையான மோதலுக்குப் பின் தமன்னாவும் தனுஷை காதலிக்கிறார். இடைவேளை வரை இதுபோதும். அதற்குப் பிறகு? வருகிறார்கள் தடித்தடியாக மூன்று வில்லன்கள். ஒருவர் தமன்னாவின் அடிதடி அப்பா (சுமன்). இனனொருவர் அவரது எதிரி (சாயாஜி ஷிண்டே). மூன்றாவது அதுல் குல்கர்னி. மூவரையும் தன்னுடைய பென்சில் தேகத்தால் துவட்டியெடுத்து காதலியின் கரம் பிடிக்கிறார் தனுஷ். |