டிரம்ப் அதிபரான சில மணி நேரத்தில் ராஜினாமா செய்த விவேக் ராமசாமி: என்ன காரணம்?
அமெரிக்க அதிபராக டொனால்ட் பதவியேற்ற சில மணி நேரங்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 47வது அதிபராக நேற்று டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அவரால் உருவாக்கப்பட்ட DODGE என்ற முக்கிய துறையின் இணைத் தலைவராக விவேக் ராமசாமி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், விவேக் ராமசாமி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அரசின் செயல் திறனை மேம்படுத்தும் முகமை என்ற DODGE துறையின் தலைவர்களாக எலான் மாஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர். டிரம்புக்கு ஆதரவாக இருவரும் தீவிரமாக செயல்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென விவேக் ராமசாமி தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். DODGE என்ற துறையை உருவாக்க உதவும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது ஒரு மரியாதை. அரசாங்கத்தை சீரமைப்பதில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். எனது எதிர்கால திட்டங்களை விரைவில் அறிவிப்பேன். மிக முக்கியமாக, அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்ற அதிபர் ட்ரம்புக்கு அனைத்து வகையிலும் உதவுவேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Edited by Siva