வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (10:18 IST)

வேலை வாய்ப்புகள் முழுசும் அமெரிக்கர்களுக்கு மட்டும்தான்! – ட்ரம்ப்பின் தடாலடி பதில்!

வெளிநாட்டிலிருந்து அமெரிக்கா வந்து பணிபுரிவதற்கான எச்1பி விசாவை தடை செய்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டும் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற காலம் முதலே வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவதை தடுக்கும் வகையில் பல திட்டங்களை அடிக்கடி செய்து வருகிறார் அதிபர் ட்ரம்ப். அமெரிக்க வேலைவாய்ப்புகள் வெளிநாட்டினரிடம் பறிபோவதாக சில சமயங்களில் வெளிப்படையாக அவர் கூறியும் உள்ளார். மெக்ஸிகோவுக்கு குறுக்கே சுவர் கட்டுவதில் ஆர்வமாக உள்ளது போலவே அமெரிக்காவிற்கு வேலை தேடி வருபவர்களுக்கான எச்1பி விசாவை நிறுத்துவதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை காரணமாக கொண்டு புதிய எச்1பி விசா அனுமதிகளை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு அமெரிக்க எம்.பிக்கள் பலர் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். தொழில்நுட்ப நிறுவனங்களும் வெளிநாட்டிலிருந்து வரும் திறமையானவர்கள் இல்லாமல் நிறுவனங்களை மேம்படுத்த முடியாது என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ”தற்போது அமெரிக்க மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். அதனால் அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகள் அனைத்தும் அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்காகதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். கொரோனா இல்லாவிட்டாலும் காலதாமதமாக இதை ட்ரம்ப் செய்திருப்பார், கொரோனா ஒரு காரணமாகிவிட்டது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.