வெள்ளை மாளிகையில இதுதான் கடைசி விஷேசம்! – ட்ரம்ப் குடும்பத்தின் சந்தோஷ தருணம்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன்பாக ட்ரம்ப் குடும்பத்தில் நடந்த விழா வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் ட்ரம்ப் ஜனநாயக வேட்பாளர் ஜோ பிடனிடம் படுதோல்வியை சந்தித்தார். அதை தொடர்ந்து இன்று ஜனவரி 20ம் தேதி ஜோ பிடன் பதவியேற்க உள்ள நிலையில் ட்ரம்ப் தனது பதவியின் இறுதி நாளில் உள்ளார்.
அதிபர் ட்ரம்ப் குடும்பம் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் சூழலில் அதற்கு முன்பாக அவர்களது வீட்டு நிகழ்ச்சி ஒன்றை கோலாகலமாக நடத்தியுள்ளனர். டொனால்டு ட்ரம்ப்பின் இரண்டாவது மனைவியான மார்லா மாஃபிளுக்கு பிறந்தவர் டிஃபானி. ஜார்ஜடவுன் சட்டப்பள்ளியில் படித்து வந்த டிஃபானி தன்னை விட 4 வயது இளையவரான மைக்கெல் பவ்லோஸ் என்பவரை காதலித்து வந்தார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன்பு இருவரது நிச்சயதார்த்த விழாவையும் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் குடும்பம் நடத்தி முடித்துள்ளது. வெள்ளை மாளிகையில் தனது நிச்சய விழா நடந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள டிஃபானி அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.