அடுத்தடுத்து தாக்கும் புயல்கள்: நிலைகுலைந்த ஜப்பான்
ஹபிகிஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத சூழலில் மீண்டும் இரண்டு புயல்கள் ஜப்பானை தாக்க இருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
பசிபிக் பெருங்கடலில் உருவான ஹகிபிஸ் புயல் கடந்த வாரம் ஜப்பானை தாக்கியது. இதில் தலைநகர் டோக்கியோ உட்பட பல நகரங்கள் சேதமடைந்தன. பல ஆயிரம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கோர புயலின் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். விபத்துக்களில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.
ஹகிபிஸ் புயலால் ஏற்பட்ட சேதங்களே இன்னும் சரிசெய்யப்படாத நிலையில் அடுத்ததாக ’நியோகுரி’ என்ற பெரும்புயல் ஒன்று ஜப்பானை நெருங்கி வருவதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் டோக்கியோவுக்கு சற்று தெற்கே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ‘புலாய்’ என்னும் பெரும்புயல் ஒன்று உருவாகியுள்ளதாகவும், அந்த புயல் அக்டோபர் 26க்குள் ஜப்பானை தாக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து புயல்களால் தாக்கப்படும் அபாயத்தில் ஜப்பான் இருப்பதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.