பிரிட்டன் வரலாற்றில் முதன்முறையாக மருத்துவர்கள் வேலை நிறுத்தம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 21 நவம்பர் 2015 (15:11 IST)
பிரிட்டனின் இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்வதென்று, தங்களுக்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் முடிவு செய்துள்ளனர்.
 
 
பிரிட்டனின் பல்வேறு துறைகளில் நிதிவெட்டு, ஊதிய வெட்டு மற்றும் ஓய்வூதிய வெட்டு என்று அரசின் மோசமான நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன.
 
இந்த வெட்டுகளுக்கு மருத்துவத்துறையும் தப்பவில்லை. அரசு மருத்துவமனைகளின் நிலைமை படுமோசமாகி வருகின்றன. மருத்துவர்களுக்கு ஊதியம் கிடைப்பதே சந்தேகமாகி விட்டது.
 
இதில் பயிற்சியில் உள்ள இளநிலை மருத்துவர்களோ பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதுமானதாக இல்லை என்றும், புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகிறார்கள்.
 
ஆனால், இவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்கவில்லை. இதனால் வேலை நிறுத்தம் செய்வதென்று மருத்துவர்கள் முடிவெடுத்தனர். வேலை நிறுத்தம் செய்வதா, வேண்டாமா என்று இளநிலை மருத்துவர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
 
இதில் 28 ஆயிரம் இளநிலை மருத்துவர்கள் வாக்களித்தனர். 98 சதவிகிதம் பேர் வேலை நிறுத்தம் செய்யலாம் என்று வாக்களித்திருக்கிறார்கள். இரண்டு சதவிகிதம் பேர் மட்டுமே வேண்டாம் என்ற கூறினர்.
 
டிசம்பர் 1, 8 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்த வேலைநிறுத்தம் நடக்கப்போகிறது. பிரிட்டனின் தேசிய மருத்துவத் திட்டத்தில் இதுவரையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ததில்லை. முதன்முறையாக, வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :