ரஜினி, கமல், அஜித், விஜய் தான் காப்பாற்றவேண்டும்: ஜப்பான் கப்பலில் சிக்கிய தமிழரின் வீடியோ
ரஜினி, கமல், அஜித், விஜய் தான் காப்பாற்றவேண்டும்:
ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் திடீரென பரவியதால் அந்த கப்பலில் உள்ள பயணிகள் பலர் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஒருசிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வைரஸ் அந்த கப்பலில் உள்ள பயணிகளிடம் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருவதாகவும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பரவி இருப்பதாகவும் கூறப்படுகிறது
இதனையடுத்து அந்த கப்பலை ஜப்பான் நாட்டு துறைமுகம் உள்பட எந்த நாட்டின் துறைமுகம் அனுமதிக்கவில்லை. இதனால் அந்த கப்பல் தற்போது நடுக்கடலில் கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜப்பான் கப்பலில் சிக்கியுள்ள தமிழர்கள் உட்பட இந்தியர்கள் காப்பாற்ற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜப்பான் கப்பலில் சிக்கியுள்ளவர்களில் ஒருவரான மதுரையைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் இந்த கப்பலில் நாங்கள் சிக்கிக்கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறோம். ரஜினி, கமல், அஜித், விஜய் உள்பட ஆகிய நடிகர்களும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் பிரதமர் மோடி அவர்களும் எங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். கப்பலில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக ரஜினி கமல் அஜித் விஜய் ஆகியோர் குரல் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்