வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (14:34 IST)

தீவிரமடையும் இஸ்ரேல் போர் - உடனே வெளியேறுங்கள்.! அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் உத்தரவு.!

இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், போர் பகுதியில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறும்படி அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
 
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா இடையேயான போர் தற்போது  தீவிரம் அடைந்துள்ளது.  அண்மையில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் திடீரென வெடித்து சிதறின. இதில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 
 
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்தான் காரணம் என குற்றம்சாட்டிய ஹிஸ்புல்லா, இதற்கான தண்டனை இஸ்ரேலுக்கு நிச்சயம் கிடைக்கும் என எச்சரித்தது.  இதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா, இஸ்ரேல் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

ஹிஸ்புல்லாவை குறி வைத்து தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில், 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். 
 
தற்போது இஸ்ரேல் ராணுவம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் பதுங்கு குழிகளில் தரைவழித் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. இந்த சூழலில் போர் பகுதியில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறும்படி அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். 

 
இதேபோல் இந்தியா உள்ளிட்ட நாடுகளும், தங்கள் நாட்டு மக்களை லெபனான் போன்ற போர் நடைபெறும் பகுதியைவிட்டு வெளியேறும்படி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.