தக்காளிகளை நகையாக அணிந்த மணப்பெண்.. வைரல் புகைப்படம்
பாகிஸ்தானை சேர்ந்த மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளிகளால் செய்யப்பட்ட நகைகளை திருமணத்திற்கு அணிந்துள்ளார்.
பாகிஸ்தானில் தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தக்காளி விலை அதிகமாகி வருகிறது. இதனால் ஒரு கிலோ தக்காளியின் மதிப்பு 300 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையை உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில், மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளிகளால் ஆன நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்துள்ளார்.
அதன் புகைப்படத்தை நைலா இணையட் என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த மணப்பெண்ணிற்கு அக்குடும்பத்தினர் 3 கூடை தக்காளி சீதனமாக வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மணப்பெண், உள்ளூர் பத்திரிக்கையாளருக்கு அளித்த பேட்டியில், “தங்கம் விலை உயர்ந்தது, அதற்கு ஈடாக தக்காளிகளும் விலை உயர்ந்துள்ளது. அதனால் தான் நான் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்துள்ளேன்” என கூறியுள்ளார்.