செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (14:20 IST)

ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உயிரிழப்பு!

iran- pakistan
ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில்  ஈரான் நாட்டை சேர்ந்த புரட்சி படை சமீபத்தில் திடீரென ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்தத் திடீர் தாக்குதலில்  பாகிஸ்தானை சேர்ந்த, இரண்டு குழந்தைகள் உயிர் இழந்ததாகவும் மூன்று பேர் காயம் அடைந்ததாகத்  தகவல் வெளியானது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனத்தை தெரிவித்தது. அதில் ‘’பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது; இது தொடர்ந்தால் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்ததுடன், ஈரான் பொறுப்பாளரை வெளியுறவு அமைச்சகத்துக்கு வரவழைத்து கண்டனத்தையும் பதிவு செய்தது.

அத்துடன் ஈரானில் உள்ள தனது தூதரக அதிகாரியை திரும்ப பெறுவதாகவும், ஈரான் தூதரக அதிகாரி பாகிஸ்தானுக்கு வரவேண்டாம் எனவும், ஈரானுடனான உயர்மட்ட அரசு முறை பயணங்கள் அனைத்தையும் ரத்து  செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.

இந்த நிலையில், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான், ஈரானில் உள்ள பலூச் தீவிரவாத நிலைகள், முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அங்குள்ள சரவண் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் அறிவித்தது.

இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தியதில், இரு நாடுகள் இடையிலான உறவும் முறிந்து, மோதல் முற்றிய  நிலையில், ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து இரான் தெரிவித்துள்ளதாவது:

ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் எல்லை கடந்த தாக்குதல் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் அன்வர் –கக்கர் தனது வெளி நாட்டு பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு நாடு திரும்புவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.