செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2023 (14:16 IST)

விஜயகாந்த் மறைவு - பவன் கல்யாண் மற்றும் சசிகலா இரங்கல்

vijayakanth
தமிழ் சினிமாவின் பிரபல  நடிகரும், தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

இன்று காலை 6.10 மணிக்கு விஜயகாந்த் மறைந்த நிலையில், சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை ( டிசம்பர் 29) மாலை 4.45 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இன்றும் நாளையும் கட்சி தலைமை அலுவலகத்தில்  விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், ‘’ தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சகோதரர் விஜயகாந்த் அவர்களின் மறைவு யாராலும் ஈடு செய்ய இயலாதது.

அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் தனது கடின உழைப்பால், ஒரு நடிகராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சியின் தலைவராக பொறுப்பேற்று, அவர் ஆற்றிய மக்கள் நலப் பணிகளையும், சமூகப் பணிகளையும் தமிழக மக்கள் என்றென்றும் நினைவில் கொள்வார்கள் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது அளவற்ற அன்பினையும், மிகுந்த மரியாதையையும் கொண்டு இருந்ததை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன். தமிழக தேர்தல் காலங்களில் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் எங்களோடு பயணித்த அந்த பசுமையான நாட்களையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.

அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவரது மகன்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டாரும், ஜனசேனா கட்சியில் தலைவருமான பவன் கல்யாண்
திரு. விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதில், ‘’புரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தனக்கென தனி
இடத்தைப் பிடித்திருக்கும் திரு.விஜயகாந்த்தின் படங்கள் தெலுங்கு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது.

குடும்பக் கதைகளுடன், சமூகக் அக்கறை கொண்ட ஆக்ஷன் படங்களிலும் நடித்துள்ளார். 2005-ல் திரு. விஜயகாந்த் கட்சியை அறிவித்த நாளில் மதுரை பகுதியில் படப்பிடிப்பில் இருந்தேன். அங்குள்ள மக்களின் புரட்சியை, சந்தோஷத்தை நேரடியாகப் பார்த்தேன்.

திரு.விஜயகாந்த் மக்கள் பக்கம் நிற்கும் விதமும், ஒரு பிரச்சனை வரும் போது போராடி துணை நிற்கும் விதமும் போற்றத்தக்கது. துன்பத்தில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகுமுறையுடன் பதிலளித்தார். தனது முதல் அடியில் அவர் சந்தித்த முடிவுகளால் மனம் தளராமல் அரசியலில் நின்றார். இது அவரது போராட்ட குணத்தை காட்டுகிறது.

சூழ்நிலைக்கு எதிராக சிங்கம் போல் நின்றார். சினிமாவில் உள்ள சிலர்களால் அவர் அவமானங்களை சந்தித்தாலும் அவர் பின்வாங்கவில்லை. யாருக்கும் அஞ்சாமல் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பக்கம் நின்றார்.

கடந்த 2014ம் ஆண்டு பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் திரு விஜயகாந்த் அவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர் தமிழகத்தில் முதல்வர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார். அனால், அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்ததால் அவர் அந்த முதல்வர் நாற்காலி வரை செல்ல முடியவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.

திரு, விஜயகாந்த்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனைவி ஸ்ரீமதி. பிரேமலதா அரசியல் பாதையை தொடர்வார் என நம்புகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.