திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (14:03 IST)

சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார்.  இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். அடிக்கடி தன்னுடைய மலரும் நினைவுகளை முகநூல் வாயிலாக பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் ஷாஜகான் படத்துக்காக சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் பாடல் உருவான விதம் குறித்து முகநூலில் ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் “விஜய் நடித்த ஷாஜகான் படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதி முடித்தேன். 'மெல்லினமே', 'மின்னலைப் பிடித்து'., 'அச்சச்சோ புன்னகை' ஆகிய பாடல்கள் இசை இலக்கியமாய் அமைந்தது கண்டு ஆனந்த ஊஞ்சலில் ஆடினேன்.

ஓர் அதிகாலையில் ஒருகால் காருக்குள்ளும் மறுகால் தரையிலும் இருந்த பரபரப்பில் அந்தப் படத்தின் இயக்குனர் ரவி ஓடிவந்தார். 'படத்துக்கு இன்னொரு பாட்டு வேண்டும்' என்றார். 'எல்லாப் பாட்டும் முடிந்து விட்டதே; இனி என்ன பாட்டு' என்றேன்.

'எல்லாப் பாட்டும் நல்ல பாட்டாகவே இருக்கு கவிஞரே; ஒரே ஒரு குத்துப்பாட்டு வேண்டும்' என்றார். (கூத்துப் பாட்டு என்பதுதான் மொழிச் சோம்பேறிகளால் குத்துப் பாட்டு என்றாகிவிட்டது) தயங்கினேன். 'விஜய் சொல்லி அனுப்பினார்' என்றார். கதாநாயகன் சொன்னபிறகு மறுக்க முடியவில்லை; எழுதிக் கொடுத்தேன்.

அரங்கம் சென்று பார்த்தால் இலக்கியப் பாடல்களுக்கு மெளனமாய் இருந்த கொட்டகை. கூத்துப் பாடலுக்குக் குலுங்கியது. விஜய் கணக்கு தப்பவில்லை. இசைஇலக்கியம் இன்புறுவதற்கு; கூத்துப் பாட்டு கொண்டாடுவதற்கு.

அந்தப் பாட்டு எந்தப் பாட்டு தெரியுமா?
'சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கறுத்த கோழி மிளகுபோட்டு
வறுத்து வச்சிருக்கேன்'