'இந்தியன் 2' படத்தில் சிம்புவுக்கு பதில் பிரபல நடிகர்!
உலக நாயக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கவுள்ளார் என்பதும் அதற்கான பயிற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனின் பேரனாக நடிக்க முதலில் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் சிம்பு நடித்தபோது தயாரிப்பு தரப்பிற்கும் சிம்புவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 'இந்தியன் 2' படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தில் சிம்பு நடிக்கவிருந்த பேரன் கேரக்டரில் சித்தார்த் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்து கால்ஷீட், சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் கமல்ஹாசனுடன் முதல்முறையாக சித்தார்த் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.