அப்போது அதை நான் செஞ்சிருக்கணும்! – மகளிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்!
பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் தன் மகளுக்கு செய்யாமல் விட்ட ஒரு செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரபல நடிகர் சரத்குமார் தனது கட்சியை நிர்வகித்துக் கொண்டே ஒருபுறம் படங்களிலும் நடித்து வருகிறார். அவரது மனைவி ராதிகா டிவி சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர்களது மகள் வரலட்சுமி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் தற்போது அதிகம் நெகட்டிவ் கதாப்பாத்திரங்கள் நடிக்கவே வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சரத்குமார், ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். பிறந்தநாள் பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படம் குறித்து நடிகர் சரத்குமார் தெரிவித்தபோது ”கதைகளமும், எங்கள் கதாப்பாத்திரமும் சரியாக அமைந்ததால் இணைந்து நடிக்கிறோம்” என கூறியுள்ளார்.
மேலும் “போடா போடி படத்தில் வரலட்சுமி முதன்முதலில் நடித்தபோது அந்த படம் வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டது. அப்போது ஒரு தந்தையாக அந்த படம் வெளிவர நான் வரலட்சுமிக்கு உதவியிருக்க வேண்டும். பிரபல இயக்குனர்களின் படங்களில் அவரை நான் நடிக்க வைத்திருக்க வேண்டும். அப்போது அதை செய்யாததை நினைத்து இப்போது நான் வருத்தப்படுகிறேன். அதற்காக என் மகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
தற்போது வரலட்சுமிக்கு திரை வாய்ப்புகள் அதிகம் வருவதில்லையாதலால் அவர் வருத்தத்தில் இருப்பதாகவும், அதனாலேயே சரத்குமார் இப்படி கூறியுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.